Published : 11 Jul 2024 09:52 AM
Last Updated : 11 Jul 2024 09:52 AM

இந்தியா இந்த உலகுக்கு யுத்தத்தை அல்ல; புத்தரை கொடுத்துள்ளது: பிரதமர் மோடி பேச்சு @ வியன்னா

வியன்னா: “இந்தியா இந்த உலகுக்கு புத்தரைக் கொடுத்துள்ளது. யுத்தத்தை அல்ல. இந்தியா எப்போதுமே இவ்வுலகுக்கு அமைதியையும், வளத்தையுமே நல்கியுள்ளது. அதனால் 21-ம் நூற்றாண்டில் உலக அரங்கில் தனது பங்களிப்பை இந்தியா வலுப்படுத்தவிருக்கிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

பிரதமர் மோடி 2 நாள் ரஷ்ய பயணத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து நேற்று (ஜூலை 10) ஆஸ்திரியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். விமானம் மூலம் ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார். தொடர்ந்து பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.
பின்னர் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அங்கே பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா மிகப்பெரிய இலக்குகளை எட்டி உயரிய மைல்கல்களைத் தொடுவதில் சிறப்பாக, பிரகாசமாக இயங்கி வருகிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நாங்கள் எங்களின் அறிவாற்றலையும், நிபுணத்துவத்தை பகிர்ந்து கொண்டு வருகிறோம். நாங்கள் உலகுக்கு யுத்தத்தை அல்ல; புத்தரைக் கொடுத்துள்ளோம். அந்த வகையில் இந்தியா எப்போதும் அமைதியையும், வளத்தையும் இத்தேசத்துக்கு வழங்கியுள்ளது. அதனால், இந்தியா 21-ம் நூற்றாண்டில் தனது பங்களிப்பை வலுப்படுத்தவிருக்கிறது.

41 ஆண்டு கால நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் ஆஸ்திரியாவுக்கு வந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா - ஆஸ்திரியா 75 ஆண்டு கால நட்பைக் கொண்டாடும் தருணத்தில் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

இந்தியாவும், ஆஸ்திரியாவும் பூகோள ரீதியாக இருவேறு இடங்களில் இருக்கலாம். ஆனால் ஜனநாயகப் பண்புகள் நம் இரு தேசங்களையும் ஒன்றிணைக்கிறது. சுதந்திரம், சமத்துவம், பன்முகத்தன்மை, சட்டத்தின் மீதான மரியாதை போன்ற ஜனநாயக மதிப்பீடுகளை நாம் பகிர்ந்து கொள்கிறோம். நமது சமூகங்கள் பல கலாசாரங்களையும், பல மொழிகளையும் கொண்டவையாக உள்ளன. இரு தேசங்களும் பன்முகத்தன்மையை கொண்டாடுகின்றன.

இந்தியாவில் நடந்த தேர்தல், உலகம் முழுவதும் உள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சில வாரங்களுக்கு முன் நடந்த இந்திய பொதுத் தேர்தலில் 650 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர். கற்பனை செய்து பாருங்கள். இவ்வளவு பெரிய தேர்தல் நடந்தும், சில மணி நேரங்களுக்குள் தேர்தல் முடிவுகள் தெளிவாகத் தெரிந்துவிட்டது.

இதுதான் எங்கள் தேர்தல் அமைப்பு மற்றும் எங்கள் ஜனநாயகத்தின் பலம். இந்தியாவில் நூற்றுக்கணக்கான அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 8000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். பன்முகத்தன்மை கொண்ட இந்த போட்டிக்குப் பிறகுதான் மக்கள் தங்கள் ஆணையை வழங்கினர். 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அரசாங்கம் தொடர்ந்து மூன்றாவது முறை இந்தியாவில் ஆட்சி செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளது.

கரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில், உலக அரசியலில் ஒரு ஸ்திரமின்மை நிலவியது. இது போன்ற ஒரு சூழலில், இந்திய மக்கள் என் மீதும், என் கட்சி மீதும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்தியா ஸ்திரத்தன்மையையும் தொடர்ச்சியையும் விரும்புகிறது என்பதற்கு இந்த தேர்தல் முடிவுகளே சான்றாகும்.

அடுத்த சில ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்.. இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் வாய்ப்புகளை ஆஸ்திரிய தொழில் துறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அரசியல் நிலைத்தன்மை, சிறந்த கொள்கைகள், சீர்திருத்தங்கள் ஆகியவற்றால் இந்தியா தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்லும்.

இன்று இந்தியா 8% வளர்ச்சி விகிதத்துடன் பொருளாதாரத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இப்போது 5வது பலமான பொருளாதாரமாக இருக்கிறோம். விரைவில் 3வது இடத்துக்கு முன்னேறுவோம். 2047-ல் இந்தியா 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும். அப்போது 3வது பெரிய பொருளாதார வல்லரசாக இந்தியா இருக்கும்.
இந்தியா-ஆஸ்திரியா இடையேயான புத்தொழில் ஒத்துழைப்பு சிறந்த பலன்களை அளிக்கும். 200 ஆண்டுகளுக்கு முன்னர் வியன்னா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது பெருமைக்குரிய விஷயம். இவ்வாறு பிரதமர் பேசினார்.

இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இந்தியாவின் சிறந்த வளர்ச்சி சூழலில் ஒரு பகுதியாக பங்கேற்குமாறும் ஆஸ்திரிய தொழில் துறையினருக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

ஆஸ்திரியாவில் 31,000 இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ சேவை துறையில் உள்ளனர். சிலர் ஐ.நா. அமைப்புகளிலும் பிற துறைகளிலும் பணியாற்றுகின்றனர். ஆஸ்திரியாவில் 500 இந்திய மாணவர்கள் உயர் கல்வி பயில்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x