Published : 09 Jul 2024 10:48 PM
Last Updated : 09 Jul 2024 10:48 PM

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது: அதிபர் புதின் வழங்கினார்

மாஸ்கோ: அரசு பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் செயிண்ட் அப்போஸ்ஸல்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். மாஸ்கோவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 22வது இந்திய - ரஷ்ய உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அவர் ரஷ்ய அதிபர் புதினுடன் இருநாட்டு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்.

இந்த நிலையில், ரஷ்ய அரசு சார்பாக பிரதமர் மோடிக்கு ‘ஆர்டர் ஆஃப் செயிண்ட் அப்போஸ்ஸல்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இது ரஷ்யாவின் மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. இந்தியா - ரஷ்யா இடையிலான நட்புறவை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு இந்த விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை ரஷ்ய அதிபர் புதின் வழங்கினார்.

இந்த விருது குறித்து பேசிய பிரதமர் மோடி, ‘இது 140 கோடி இந்தியர்களுக்கான கவுரவம் மற்றும் நூற்றாண்டுகள் கடந்த இருநாட்டு நட்பின் இலக்கணம் என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “கடந்த 25 ஆண்டுகளில் அதிபர் புதினின் தலைமையில் இந்திய - ரஷ்ய உறவுகள் வலுப்பெற்றுள்ளன. இரு நாட்டு மக்களின் சிறந்த எதிர்காலத்திற்காக, மக்களிடையேயான கூட்டாண்மையை நாம் மேலும் ஊக்குவிக்கவும் ஆதரிக்கவும் வேண்டும்.

இந்தியா-ரஷ்யா நட்பு மிகவும் முக்கியமானது. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நாம் தொடர்ந்து ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த திசையில் நாம் தொடர்ந்து செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.

செயிண்ட் ஆண்ட்ரூ விருது: இயேசுவின் முதல் அப்போஸ்தலரும், ரஷ்ய துறவியுமான செயிண்ட் ஆண்ட்ரூவின் நினைவாக, 1698-ம் ஆண்டு பேரரசர் ஜா பீட்டர் தி கிரேட் ‘ஆர்டர் ஆஃப் செயிண்ட் அப்போஸ்ஸல்’ விருதை அறிமுகம் செய்தார்.

முன்னதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று மாஸ்கோ சென்றடைந்தார். விமான நிலையம் சென்றடைந்த அவரை அந்நாட்டு மூத்த துணைப் பிரதமர் டெனிஸ் மான்டுரோவ் வரவேற்றார். பின்னர் அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி ராணுவ மரியாதையும் சிவப்பு கம்பள வரவேற்பும் வழங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x