Published : 09 Jul 2024 03:00 PM
Last Updated : 09 Jul 2024 03:00 PM

“ஜனநாயக நாட்டின் தலைவர் மோடி ஒரு குற்றவாளியை கட்டி அணைக்கிறார்” - உக்ரைன் அதிபர் கருத்து

பிரதமர் மோடி மற்றும் புதின் | உள்படம்: ஜெலன்ஸ்கி

கீவ்: உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரான மோடி ஒரு குற்றவாளியை கட்டி அணைப்பது ஏமாற்றம் அளிப்பதாக உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தள பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். அங்கு ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். இருவரும் பரஸ்பரம் தங்களது நட்பினை வெளிப்படுத்தினார். அப்போது ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டனர். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில் ஜெலன்ஸ்கி இதனை தெரிவித்துள்ளார்.

“உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 37 பேர் உயிரிழந்தனர். அதில் மூவர் சிறுவர்கள். 170 பேர் காயமடைந்துள்ளனர். உக்ரைனில் அமைந்துள்ள மிகப் பெரிய குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இளம் புற்றுநோயாளிகள் தான் அவர்களது இலக்கு. பலர் அதன் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் ஒரு உலகில் கொடுங்கோன்மை செயல்களை செய்யும் குற்றவாளியை மாஸ்கோவில் கட்டி அணைப்பதை பார்க்கும் போது அமைதி முயற்சிகளுக்கு பெரும் ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது” என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் ஐந்து நகரங்களின் மீது திங்கட்கிழமை அன்று ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் முக்கிய கட்டிடங்களை தாக்கியது. இதில் அந்த குழந்தைகள் மருத்துவமனையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x