Published : 08 Jul 2024 11:59 PM
Last Updated : 08 Jul 2024 11:59 PM
மாஸ்கோ: “உங்கள் முழு வாழ்க்கையையும் உங்கள் நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்துள்ளீர்கள். இதனை இந்திய குடிமக்கள் நன்கு அறிவார்கள்” என்று மாஸ்கோவில் பிரதமர் மோடியை வரவேற்றுப் பேசிய ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார்.
இந்திய - ரஷ்ய உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் டெல்லியில் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றார். அதன்பிறகு 2022, 2023-ம் ஆண்டுகளில் உச்சி மாநாடு நடைபெறவில்லை. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்திய, ரஷ்ய உச்சி மாநாடு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள இரண்டு நாள் அரசு பயணமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார்.
மாஸ்கோ விமான நிலையம் சென்றடைந்த அவர், அங்கிருந்து புதினின் நோவோ-ஓகாரியோவோவில் உள்ள் அதிபர் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியை வரவேற்று பேசிய ரஷ்ய அதிபர் புதின், “மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தற்செயலானது அல்ல என்று நான் நினைக்கிறேன். இது உங்கள் நாட்டின் தலைவராக நீங்கள் பல ஆண்டுகளாக உழைத்ததன் பலன்.
உங்களிடம் சொந்த யோசனைகள் உள்ளன. நீங்கள் மிகவும் ஆற்றல் மிக்க நபர். இந்தியா மற்றும் இந்திய மக்களின் நலன்கள் குறித்த முடிவுகளை எவ்வாறு எடுப்பது என்பது உங்களுக்குத் தெரியும். அதன் விளைவுகள் வெளிப்படையானவை. பொருளாதார அடிப்படையில் இந்தியா நம்பிக்கையுடன் உலகின் மூன்றாவது இடத்தில் உள்ளது.
உங்கள் முழு வாழ்க்கையையும் உங்கள் நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்துள்ளீர்கள். இதனை இந்திய குடிமக்கள் நன்கு அறிவார்கள்” இவ்வாறு புதின் தெரிவித்தார்.
கடந்த 2019-ம் ஆண்டில் பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு சென்றார். இந்த சூழலில் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக ரஷ்யாவுக்கு அவர் செல்கிறார். தற்போதைய சூழலில் இந்திய பிரதமரின் ரஷ்ய பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த பயணத்தின் போது பிராந்திய, சர்வதேச நிலவரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள். பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் சிறப்பு மதிய விருந்து அளிக்க உள்ளார். ரஷ்யாவில் வாழும் இந்தியர்களின் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மாஸ்கோவில் உள்ள போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார் என ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT