Published : 08 Jul 2024 09:23 AM
Last Updated : 08 Jul 2024 09:23 AM
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின் படி இடதுசாரி கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இந்த முறை அங்கு வலதுசாரி கூட்டணி கட்சியான நேஷனல் ரேலி தலைமையில் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இடதுசாரி கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் முன்னிலை பெற்று இருந்தாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை அந்தக் கூட்டணியால் பெற முடியவில்லை என தெரிகிறது. இரண்டாம் இடத்தில் அதிபர் இமானுவேல் மேக்ரான் அங்கம் வகிக்கும் மையவாத கூட்டணி மற்றும் மூன்றாம் இடத்தில் வலதுசாரிகளும் உள்ளனர்.
மொத்தம் 577 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இந்த தேர்தலில் 289 இடங்களை பெறுகின்ற கூட்டணி, ஆட்சி அமைக்கும். ஆனால், அங்கு எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் பிரான்ஸில் அரசியல் நிலை ஸ்திரமற்று உள்ளது. பிரான்ஸ் உள்பட 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் இமானுவேல் மேக்ரான் கட்சி குறைவான உறுப்பினர்களை பெற்றது. இதையடுத்து அங்கு அவை கலைக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டது.
பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல், தனது பதவியை ராஜினாமா செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் அங்கு புதிய பிரதமர் பதவி ஏற்பார். அதிபர் மேக்ரான் தனது கொள்கைகளுக்கு எதிரான புதிய பிரதமருடன் பணியாற்ற வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளார். அடுத்த சில நாட்களில் பிரான்ஸில் ஒலிம்பிக் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT