Last Updated : 06 Jul, 2024 05:00 PM

 

Published : 06 Jul 2024 05:00 PM
Last Updated : 06 Jul 2024 05:00 PM

மூன்று மனிதர்கள், ஒரு பன்றி: உலகின் பழமையான குகை ஓவியம்

இந்தோனேசியாவில் குகை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பழமையான ஓவியங்கள் பண்டைய மனிதர்களின் சிந்தனை, வாழ்க்கை முறையை இன்றைய தலைமுறை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.

இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசியின் மரோஸ் பாங்கெப் பகுதியில் உள்ள லியாங் கரம்புவாங்கின் சுண்ணாம்புக் குகையில் 51,200 ஆண்டுப் பழமையான ஓவியங்களை ஆஸ்திரேலியா, இந்தோனேசியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது, இதற்கு முன்னர் கண்டறியப்பட்ட பழமையான குகை ஓவியதைவிட 5,000 ஆண்டுகள் பழமையானது.

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள தேசிய ஆராய்ச்சி கண்டுபிடிப்பு முகமையின் நிபுணர்களில் ஒருவரான அகஸ் ஒக்டாவியானா தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் இக்குகை ஓவியத்தை கண்டறிந்துள்ளனர். இக்குகை ஓவியத்தில் ஒரு பன்றியின் உருவத்துடன் மூன்று மனித உருவங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

இக்கண்டுபிடிப்பு குறித்து அகஸ் ஒக்டாவியானா கூறும்போது, “மனித கலாச்சாரத்தில் கதை சொல்லல் முக்கிய நிகழ்வாக இருந்திருக்கிறது. அநேகமாக மனிதர்கள் 51,200 ஆண்டுகளுக்கும் முன்பே கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார்கள். வார்த்தைகளை நம்மால் புதைபடிவமாக பெற முடியாது அல்லவா? ஆனால், அதுவே கதைகளைக் கலைக் காட்சிகளாகச் சித்தரிப்பதன் மூலம் நாம் அதனை உலகிற்குச் சொல்ல முடியும். சுலவேசியில் கண்டறியப்பட்ட குகை ஓவியங்கள் அத்தகைய சான்றுகள்தான் ” என்றார்.

மேலும், இக்குகை ஓவியக் கண்டுபிடிப்பு மனித பரிணாம வளர்ச்சி குறித்த கருத்துகளை மாற்றும் தன்மை கொண்டது என ஆஸ்திரேலியாவின் க்ரிஃபித் பல்கலைக்கழகப் பேராசிரியர் மாக்சிம் ஆபர்ட் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக தென்னாப்பிரிக்காவில் ப்ளோம்பாஸ் குகைகளில் 75,000 - 100,000 ஆண்டுகளுக்கு முன்னர் பாறைகளில் வரையப்பட்ட வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை பெரும்பாலும் வட்டம்,முக்கோணம் போன்ற வடிவங்களில் இருந்தன. ஆனால், சுலவேசி தீவில் கண்டறியப்பட்ட குகை ஓவியங்கள் மனிதனை கலை, அறிவியலுக்கு அழைத்துச் சென்ற சிந்தனைப் பரிணாமத்தைப் பிரதிப்பலிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x