Published : 05 Jul 2024 10:47 AM
Last Updated : 05 Jul 2024 10:47 AM
லாகூர்: பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அனைத்து சமூக வலைதள சேவையும் சுமார் ஆறு நாட்களுக்கு தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 13 முதல் 18-ம் தேதி வரையில் அங்கு இந்த தடை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் குறித்து பார்ப்போம்.
பஞ்சாப் மாகாண முதல்வர் மர்யம் நவாஸ் தலைமையிலான அரசு இதனை அறிவித்துள்ளது. இது தொடர்பான பரிந்துரையை ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, மத்திய அரசிடம் முன்வைத்துள்ளது. வன்முறையை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என மாகாண அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் வெறுப்பு பேச்சு மற்றும் தவறான கருத்து, தகவல் பகிரப்படுவதை தடுக்கலாம் என அந்த அரசு கருதுகிறது.
இதனை வியாழக்கிழமை இரவு பஞ்சாப் மாகாண அரசு தெரிவித்தது. சுமார் 120 மில்லியன் மக்கள் இந்த மாகாணத்தில் வசித்து வருகின்றனர். முதல்வர் மர்யம் நவாஸின் கேபினட் குழு, யூடியூப், எக்ஸ், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக் உள்ளிட்ட தளங்களை இதன்போது தடை செய்யவுள்ளது.
கடந்த பிப்ரவரி முதல் பாகிஸ்தான் நாட்டில் எக்ஸ் தளம் தடை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பொதுத் தேர்தலின் போது தேர்தல் முடிவுகள் சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டில் இந்த தடை அங்கு விதிக்கப்பட்டது. இந்த சூழலில் அந்த நாட்டு ராணுவ தளபதி அசிம் முனீர், சமூக வலைதளங்களை கடுமையாக விமர்சித்திருந்தார். அது சமூகத்துக்கு தீயது என்றும், டிஜிட்டல் தீவிரவாதத்துக்கு வழிவகை செய்வதாகவும் அவர் சொல்லி இருந்தார். அந்த நாட்டின் துணை பிரதமர் இஷக் தார், சமூக வலைதளங்களுக்கு நாட்டில் நிரந்தர தடை வேண்டுமென தெரிவித்து வருகிறார்.
அந்த நாட்டில் ஆளும் அரசு மற்றும் ராணுவத்தின் மீது சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT