Published : 05 Jul 2024 05:50 AM
Last Updated : 05 Jul 2024 05:50 AM
லண்டன்: பிரிட்டனில் நேற்று நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வாக்களித்தனர். வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கியது.
பிரிட்டனில் கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. எனினும், இந்த காலகட்டத்தில் பிரதமர்கள் மாறிக் கொண்டே வந்துள்ளனர். இப்போது 5-வது நபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் (44) பிரதமராக பதவி வகிக்கிறார். இந்நிலையில், அங்கு மொத்தம் உள்ள 650 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் 40 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 4.6 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு (வாக்குச் சீட்டு முறையில்) இரவு 10 மணி வரை நடைபெற்றது.
இதில் பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவி அக்சதா மூர்த்தியுடன் சென்று வாக்களித்தார். இருவரும் வாக்குப் பதிவு மையத்துக்கு செல்வது போன்ற ஒரு புகைப்படத்தை ரிஷி சுனக் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன், “வாக்குப் பதிவு தொடங்கிவிட்டது. பெரும்பாலான கருத்து கணிப்புகள் லேபர் கட்சி வெற்றி பெறும் என கூறுகின்றன. இதை பொய்யாக்கும் வகையில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வாக்களியுங்கள். லேபர் கட்சிக்கு வாக்களித்தால் அதிக வரி விதிப்பார்கள். இதைத் தடுக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
இதுபோல எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் தொகுதியில் வாக்களித்தனர். இந்தத் தேர்தலில் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி, கீர் ஸ்டார்மர் (61) தலைமையிலான லேபர் கட்சி, எட் தவே தலைமையிலான லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி உள்ளிட்டவை போட்டியிடுகின்றன.
நேற்று இரவு 10 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்ததும், வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இன்று காலையில் முன்னணி நிலவரம் தெரிந்துவிடும்.
இந்தத் தேர்தலில், முக்கிய எதிர்க்கட்சியான லேபர் கட்சி 418 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறுகின்றன. மொத்தம் உள்ள 650-ல் 326 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2005-ம் ஆண்டு நடந்த தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்றது. அப்போது கார்டன் பிரவுன் பிரதமராக இருந்தார். 2010 தேர்தலில் அக்கட்சி தோல்வி அடைந்தது. 14 ஆண்டுக்குப் பிறகு இக்கட்சி ஆட்சியைப் பிடித்தால் ஸ்டார்மர் பிரதமராக பொறுப்பேற்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT