Published : 03 Jul 2024 09:58 AM
Last Updated : 03 Jul 2024 09:58 AM

‘நான் தூங்கிவிட்டேன்’ - ட்ரம்ப் உடனான விவாதம் குறித்து பைடன் விளக்கம்

விவாத நிகழ்வில் பங்கேற்ற அதிபர் ஜோ பைடன்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் 2024-க்கான முதல் நேரடி விவாதத்தில் அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விவாதம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் பைடன் செயல்பட்ட விதம் விமர்சனத்துக்குள் ஆனது. இந்தச் சூழலில் அதற்கான விளக்கத்தை அவர் கொடுத்துள்ளார்.

கடந்த வாரம் நடந்த விவாதத்தில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் நேரடி விவாதம் மேற்கொண்டனர். உள்நாட்டு விவகாரம் முதல் உலக நாடுகள் வரையிலான பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசி இருந்தனர். இதில் ட்ரம்ப் அதிரடி பாணியில் பேசினார். பைடன் சற்று அமைதி காத்தார் என பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

இந்த விவாதத்தின் போது ட்ரம்புக்கு பைடன் பதிலடி கொடுக்க முயற்சித்தார். இருந்தும் அவர் பேச முயன்ற போது தடுமாறினார். அது நேரலையில் பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி தந்தது.

மேலும், ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்களுக்கு சங்கடமாக அமைந்தது. இதையடுத்து வேட்பாளர் பைடன் மாற்றப்படலாம் என்றும் சொல்லப்பட்டது. அந்த நாட்டு அதிபர் தேர்தலில் ஒரு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர், தானாக போட்டியில் இருந்து விலகினால் மட்டுமே மாற்று வேட்பாளரை கட்சி அறிவிக்க முடியும் என்ற சூழல் உள்ளது கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில் முதல் விவாதத்தில் தனது செயல்பாடு குறித்து அதிபர் பைடன் விளக்கம் கொடுத்துள்ளார். “இது நான் கூறும் சாக்கு அல்ல. இது எனது விளக்கம். விவாதத்தில் நான் ஸ்மார்ட்டாக செயல்பட வில்லை. அதற்கு முதல் நாள் இரவு எனக்கு சரியான தூக்கம் இல்லை. விவாத நிகழ்வுக்கு முன்பாக உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது இதற்கு காரணம். நான் எனது ஊழியர்கள் சொன்னதை கேட்கவில்லை. அதோடு விவாத மேடையில் கிட்டத்தட்ட நான் தூங்கிவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.

விவாத நிகழ்வுக்கு முன்பாக பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு பைடன் பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 1 Comments )
  • R
    R.Anbazhagan Anbu

    சூப்பர் மேன்.

 
x
News Hub
Icon