Published : 02 Jul 2024 04:19 PM
Last Updated : 02 Jul 2024 04:19 PM

‘நேபாள பிரதமர் பிரசண்டா பதவி விலக மறுப்பு - நம்பிக்கை வாக்கெடுப்பு கோர முடிவு’

பிரதமர் புஷ்ப கமல் தஹால் எனும் பிரசண்டா

காத்மாண்டு: நேபாளத்தின் மிகப் பெரிய கட்சிகளான நேபாள காங்கிரஸ் மற்றும் சிபிஎன் - யுஎம்எல் இடையே கூட்டணி ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டுள்ள போதிலும், பிரதமர் புஷ்ப கமல் தஹால் எனும் பிரசண்டா பதவி விலக மாட்டார் என்றும், மாறாக நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வார் என்றும் அவரது கட்சி தெரிவித்துள்ளது.

275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில், நேபாளி காங்கிரஸ் கட்சி 89 உறுப்பினர்களையும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-யுனிஃபைட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) 78 உறுப்பினர்களையும் கொண்டுள்ளன. தற்போது இவ்வரு கட்சிகளும் கூட்டணி அமைத்து புதிய அரசை அமைக்க ஒப்புக்கொண்டுள்ளன.

நேபாளி காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் டியூபாவும், சிபிஎன்-யுஎம்எல் தலைவர் ஒலி-யும் நடத்திய பேச்சுவார்த்தையில் இதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆட்சிக் காலத்தில் பிரதமர் பதவியை இரு கட்சிகளும் சமமாக பிரித்துக்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நேபாள அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றத்தால், ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்), அதிகாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், நேபாளின் பலுவத்தாரில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பிரதமர் பிரசண்டா, பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் செயலாளர் கணேஷ் ஷா இதனை தெரிவித்துள்ளார்.

ஒன்றரை ஆண்டுகாலமாக பிரதமராக இருந்து வரும் பிரசண்டா, இதுவரை 3 முறை நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி உள்ளார். தற்போது கூட்டணி அமைத்துள்ள நேபாளி காங்கிரஸ் கட்சியும், சிபிஎன்-யுஎம்எல் கட்சியும் 167 உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. ஆனால், பெரும்பான்மைக்கு 138 இடங்களே போதுமானதாகும்.

அரசியலமைப்பு விதியின்படி, பிரதிநிதிகள் சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர பிரதமருக்கு 30 நாட்கள் அவகாசம் உள்ளதால், அதற்குள் அவர் ஏதாவது செய்தால் புதிய அரசு அமைவதை தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x