Published : 24 May 2018 08:31 PM
Last Updated : 24 May 2018 08:31 PM
வடகொரியா தனது அணு ஆயுதச் சோதனை இடங்களை தொடர் வெடிப்புகள் மூலம் அழித்த பிறகு சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்-ஐ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிங்கப்பூரில் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார், இந்நிலையில் அந்தச் சந்திப்பை அதிபர் ட்ரம்ப் ரத்து செய்வதாக கடிதம் ஒன்றில் அறிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், “நீங்கள் அணு ஆயுதத் திறன்கள் பற்றி பேசினீர்கள், ஆனால் எங்களுடைய அணு ஆயுதங்கள் மிகப்பெரியது, சக்தி வாய்ந்தது அதனை நாங்கள் ஒரு போதும் பயன்படுத்தாதிருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வடகொரிய அதிபருக்கு ட்ரம்ப் எழுதிய கடிதத்தில் “உங்களுடைய சமீபத்திய அறிக்கை ஒன்று பெரிய அளவு பகைமையும் கோபாவேசமும் நிறைந்ததாக இருந்ததால், நீண்ட நாளைய திட்டமான நம் சந்திப்பை இப்போது நடத்துவது சரியாகாது என்று நான் கருதுகிறேன், இதற்காக நான் வருந்துகிறேன்” என்று எழுதியுள்ளார், இது இழந்த வாய்ப்புதான் ஆனால் இன்னொரு சந்தர்ப்பத்தில் கிம்-ஐ தான் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.
இன்று, வடகொரியா ட்ரம்புடனான அடுத்த மாதச் சந்திப்பிலிருந்து விலகுவதாக திரும்பத் திரும்ப கூறிவந்தது. மேலும் தேவைப்பட்டால் அமெரிக்காவுடன் அணுஆயுதப் போருக்கும் தயார் என்று கூறியிருந்தது.
வடகொரிய துணை அயலுறவு அமைச்சர் சோ சன் ஹூய், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சை “அரசியல் வெத்துவெட்டு” என்றும் தங்களை லிபியாவுடன் ஒப்பிட்டு அணு ஆயுத நாடு என்று மைக் பென்ஸ் கூறியதைச் சுட்டிக்காட்டி கடாஃபி தன் அணு ஆயுதத் திட்டங்களைக் கைவிட்ட பிறகும் நேட்டோ படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் அணு ஆயுத சோதனைத் தளத்தை தகர்த்தது வடகொரியா. ஆனால் ட்ரம்ப் தன் அடுத்த மாதச் சந்திப்பை ரத்து செய்தார்.
அவர் எழுதிய கடிதம் வருமாறு:
நமது சமீபத்திய பேச்சு வார்த்தைகளுக்கு தாங்கள் காட்டிய நேரம், பொறுமை முயற்சி ஆகியவற்றை பாராட்டுகிறோம். ஜூன் 12ம் தேதி நமது சிங்கப்பூர் சந்திப்பை விரும்பியது அதிபர் கிம் தான் என்பதை அறிகிறோம். ஆனால் அது எங்களுக்கு பிரச்சினையில்லை. நானும் உங்களைச் சந்திக்க ஆவலாகவே இருந்தேன்.
ஆனால் வருத்தத்திற்குரிய விதமாக நீங்கள் சமீபத்தில் வெளிப்படையான பகைமையையும் கோபாவேசத்தையும் காட்டி பேசியிருக்கிறீர்கள். ஆகவே இந்தத் தருணத்தில் நம் நீண்ட நாள் திட்டமிட்ட சந்திப்பு நடைபெறுவது சரியாக இருக்காது. எனவே நம் இருவரின் நன்மை கருதி, அடுத்த மாத சந்திப்பை ரத்து செய்வதை இந்தக் கடிதம் பிரதிநிதித்துவம் செய்கிறது. ஆனால் இது உலகிற்கு நஷ்டம்தான்.
நீங்கள் அணு ஆயுத திறன்கள் பற்றி பேசினீர்கள், ஆனால் எங்களுடையது சக்தி வாய்ந்தது, மிகப்பெரியது, அதனை நாங்கள் ஒருபோதும் பயன்படுத்தாதிருக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன்...
நமது சந்திப்பு அவசியம் என்று கருதி உங்கள் மனநிலை மாறினால் என்னை அழைக்கவோ, எனக்கு எழுதவோ தயங்க வேண்டாம்... இழந்த இந்த வாய்ப்பு உண்மையில் வரலாற்றின் ஒரு துயரமான கணம்.
என்று கடிதம் எழுதியுள்ளார் ட்ரம்ப்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT