Published : 29 Jun 2024 04:49 AM
Last Updated : 29 Jun 2024 04:49 AM
ஃபுளோரிடா: சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஹீலியம் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதால், அதை சரிசெய்வதில் 2 வாரத்துக்கு மேல் தாமதம் ஏற்பட்டுள்ளது. விண்கலத்தை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் முயற்சி ஜூலை 2-ம் தேதிக்குபின் மேற்கொள்ளப்படும் நாசா தெரிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்களைஅனுப்ப ‘ஸ்டார்லைனர்’ என்றகேப்சூல் விண்கலத்தை போயிங்நிறுவனம் தயாரித்தது. பரிசோதனை முயற்சியாக இந்த ஸ்டார்லைனர் விண்கலம் அட்லஸ் 5 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து கடந்த 5-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட்டது. இதில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு பலமுறை சென்று வந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் அனுப்பப்பட்டனர். 25 மணி நேர பயணத்துக்குப்பின் சர்வதேச விண்வெளி மையம் சுற்றிக் கொண்டிருக்கும் சுற்றுப்பாதையை ஸ்டார்லைனர் விண்கலம் சென்றடைந்தது. விண்வெளி மையத்தை, விண்கலம் சென்றடைந்ததும், அதிலிருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று அங்கு ஏற்கனவே தங்கியிருக்கும் வீரர்களுடன் சேர்ந்து பணியாற்றினர்.
விண்வெளி மையத்துடன் பொருத்தப்பட்ட ஸ்டார்லைனர் விண்கலத்தை ஆய்வு செய்தபோது, அதில் நிரப்பப்பட்டிருந்த ஹீலியம் எரிவாயு 5 இடங்களில் கசிவது கண்டறிப்பட்டது. இதனால் விண்கலத்தை இயக்கும்‘த்ரஸ்டர்’ எனப்படும் 5 கருவிகள் வேலை செய்யவில்லை. இவற்றை சரிசெய்யும் பணியில்நாசா பொறியாளர்கள் ஈடுபட்டதில் தற்போது 4 த்ரஸ்டர்கள் இயங்குகின்றன. விண்கலத்தை உந்தி தள்ள மொத்தம் 28 த்ரஸ்டர்கள் உள்ளன. விண்கலம் பூமி திரும்பும் முன் அதன் செயல்பாடு மற்றும் பாதுகாப்பை நாசா பொறியாளர்கள் முழுவதுமாக ஆய்வு செய்வர். இந்த பணி காரணமாக ஸ்டார்லைனர் விண்கலத்தை மீண்டும் பூமி திரும்ப வைக்கும் முயற்சி ஜூலை 2-ம் தேதிக்கு பின் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
ஸ்டார்லைனர் விண்கலத்தில் சென்ற சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த 14-ம் தேதி பூமி திரும்பதிட்டமிடப்பட்டிருந்தனர். பின் இந்த பயண தேதி கடந்த 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த முயற்சி ஜூலை 2-ம் தேதிக்கு பின் மேற்கொள்ளப்பட உள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்துக்குள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் மற்ற வீரர்களுடன் தங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, வசதி, தகவல் தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை. அவர்கள் தங்கள் பணியை தொடர்ந்து மேற்கொள்கின்றனர். ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஹீலியம் கசிவு பிரச்சினை சரி செய்யப்பட்டவுடன் அவர்கள் பூமிக்குதிரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT