Published : 28 Jun 2024 01:31 PM
Last Updated : 28 Jun 2024 01:31 PM
அட்லாண்டா: வரும் நவம்பர் மாதம் அமெரிக்க நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. வெள்ளை மாளிகையில் மீண்டும் அதிபர் அரியணையை அலங்கரிக்க ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர்.
இந்த சூழலில் இன்று (வெள்ளிக்கிழமை) இருவரும் நேரடி விவாதத்தில் கலந்து கொண்டு பேசினர். இதுதான் அதிபர் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு நடைபெறும் முதல் விவாத நிகழ்வு. இதனை சிஎன்என் ஊடக நிறுவனம் ஒருங்கிணைத்தது. இதில் இருவரும் காரசாரமாக பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசினர். அதே நேரத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அடுக்கினர். மேலும், தனிப்பட்ட ரீதியாகவும் தாக்கி பேசினர்.
பணவீக்கம் குறித்து இருவரும் முதலில் விவாதித்தனர். அமெரிக்க நாட்டின் பொருளாதார நிலை சீர்குலைந்த நிலையில் ட்ரம்ப் ஆட்சியை விட்டு சென்றதாகவும். அதனை தனது தலைமையிலான அரசு சீர் செய்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மருந்துகளின் விலையை குறைத்ததாகவும் அதிபர் பைடன் தெரிவித்தார். ‘உங்கள் ஆட்சியில் முறைகேடாக குடியேறியவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு’ என ட்ரம்ப் சாடினார்.
மேலும், அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர் என்றால் அது பைடன் தான் என்றார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்பியது தேசத்துக்கே சங்கடமான நாளாக அமைந்தது எனவும் ட்ரம்ப் தெரிவித்தார். அதோடு பைடன் ஆட்சியில் குடிபெயர்ந்தவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டு வைத்தார். “உங்கள் ஆட்சியில் தாயையும், பிள்ளையையும் நீங்கள் தனித்து வைத்தீர்கள். அது நியாயமான செயல் அல்ல” என பைடன் தெரிவித்தார்.
இப்படியாக உக்ரைன் - ரஷ்யா போர், கருக்கலைப்பு விவகாரம், வெளியுறவுக் கொள்கை, காசா போர், காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இந்த விவாதத்தின்போது ட்ரம்புக்கு பைடன் பதிலடி கொடுக்க முயற்சித்தார். இருந்தும் அவர் பேச முயன்ற போது தடுமாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT