Published : 27 Jun 2024 11:45 PM
Last Updated : 27 Jun 2024 11:45 PM
மாலே: மாலத்தீவில் அதிபர் முகமது முய்சுவுக்கு பில்லி,சூனியம் வைத்ததாக இரண்டு அமைச்சர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மாலத்தீவு நாட்டில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவு வகித்து வருபவர் ஷாம்னாஸ் சலீம். இவரது கணவர் ஆதம் ரமீஸ். இவரும் அதிபர் அலுவலகத்தில் அமைச்சராக இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கு பில்லி, சூனியம் வைத்ததாக கூறி மாலத்தீவு போலீஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இருவரும் அமைச்சர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரையும் தவிர, மேலும் இரண்டு பேரை இந்த வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் ஏழு நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஷாம்னாஸ் மற்றும் ரமீஸ் இருவரும், முகமது முய்சு மாலத்தீவு தலைநகர் மாலே மேயராக பதவி வகித்த காலகட்டத்தில், மாலே நகர சபையின் உறுப்பினர்களாக அவருடன் பணியாற்றியுள்ளனர். அதிபருக்கு எதிரான நடவடிக்கையில் இருவரும் ஈடுபட்டதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும் இந்த சம்பவம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் மாலத்தீவு அரசு இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT