Published : 27 Jun 2024 05:21 AM
Last Updated : 27 Jun 2024 05:21 AM

அமெரிக்க ராணுவத்தை உளவு பார்த்த வழக்கு முடிந்தது: ஆஸ்திரேலியா திரும்பினார் ஜூலியன் அசாஞ்சே

ஜூலியன் அசாஞ்சே

கான்பெரா: அமெரிக்க ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த வழக்கில் விடுவிக்கப்பட்டதையடுத்து, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே நேற்று தனி விமானம் மூலம் ஆஸ்திரேலியா திரும்பினார்.

அமெரிக்க ராணுவத்தின் போர்குற்றம், மனித உரிமை மீறல், ஊழல் தொடர்பான ரகசிய ஆவணங்களை ஹேக் செய்து விக்கிலீக்ஸ் இணையதளத்தில் அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே வெளியிட்டது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அமெரிக்க அரசின் நெருக்கடி காரணமாக இங்கிலாந்தின் ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த அசாஞ்சே2019-ல் கைது செய்யப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், அமெரிக்கநீதித்துறையுடன் அசாஞ்சே ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டார். அதன்படி, அமெரிக்க ராணுவ ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸில் வெளியிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டு, வழக்கில் ஆஜராவதாக உறுதி அளித்தார்.

அமெரிக்காவின் வடக்கு மரியானா தீவுகளின் தலைநகரான சைபானில் உள்ள நீதிமன்றத்துக்கு லண்டனிலிருந்து நேற்று தனி விமானத்தில் வந்த அசாஞ்சே நீதிபதிகள் முன்பு ஆஜரானார். அப்போது, அவர் உளவு வேலையில் ஈடுபட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, அசாஞ்சேவுக்கு 5 ஆண்டு 2 மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அசாஞ்சே ஏற்கெனவேஇங்கிலாந்து சிறையில் தண்டனையை அனுபவித்துவிட்டதால் அவரை விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

இதையடுத்து, அசாஞ்சே அதே தனி விமானத்தில் மரியானா தீவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டார். அப்போது, அவருடன் அமெரிக்காவுக்கான ஆஸ்திரேலிய தூதர் கெவின் ரூட் மற்றும் இங்கிலாந்துக்கான தூதர்ஸ்டீபன் ஸ்மித் ஆகியோரும் உடனிருந்தனர். அசாஞ்சேவை விடுவிக்க நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இவ்விருவரும் முக்கிய பங்கு வகித்தனர். தனி விமானத்துக்கான ஏற்பாட்டை அசாஞ்சே குழுவே ஏற்றுக் கொண்டது. இந்த விமானம் நேற்று ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெராவை வந்தடைந்தது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ் நாடாளுமன்றத்தில் கூறுகையில், “லண்டன் சிறையில் 5 ஆண்டுகள் அடைக்கப்பட்ட அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து நடத்தப்பட்ட உறுதியான, கவனமான,பொறுமையான போராட்டத்துக்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. நாங்கள் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் இப்பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x