Published : 04 May 2018 06:31 PM
Last Updated : 04 May 2018 06:31 PM
இந்திய தொழிலதிபரிடமிருந்து 20 மில்லியன் இலங்கை ரூபாய்கள், அதாவது 1,26,823 அமெரிக்க டாலர்களை லஞ்சமாகப் பெற்ற இலங்கை அதிபர் சிறிசேனாவின் தலைமை உதவியாளர் ஐ.எச்.கே.மகாணாமாவை இலங்கையின் ஊழல் தடுப்பு அமைப்பு கைது செய்தது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் ஒரு கார் பார்க்கிங்கில் இந்த லஞ்சப் பணத்தை அவர் பெற்றதாக துப்பு கிடைத்ததையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
“லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணையம்” மகாணாமா கைது செய்ததை உறுதி செய்தது, ஆனால் அந்த இந்தியத் தொழிலதிபர் யார் என்பது பற்றிய விவரங்களை அளிக்க மறுத்து விட்டது.
ஆனால் அந்தத் தொழிலதிபர் திரிகோணமலையில் உள்ள கந்தேல் சர்க்கரை ஆலையில் முதலீடு செய்துள்ளார் என்ற தகவல் தெரிந்துள்ளது.
இது குறித்து, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணையர் குருகே தி இந்துவிடம் (ஆங்கிலம்) கூறும்போது, “இந்திய முதலீட்டாளர் எங்களை அழைத்து லஞ்சம் பற்றி தெரிவித்தார். முன்பு மகாணாமா நிலங்கள் அமைச்சகத்தில் செயலராக இருந்தவர்” என்றார்.
முதலீட்டாளரிடமிருந்து முதலில் 540 மில்லியன் இலங்கை ரூபாய்களை லஞ்சமாகக் கேட்டுள்ளார் மகாணாமா. பிறகு பேச்சுவார்த்தை மூலம் 100 மில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை 20 மில்லியன் ரூபாய்கள் கொழும்புவில் உள்ள கடற்கரை விடுதியான தாஜ் சமுத்ராவின் கார் பார்க்கில் வைத்து கைமாறியுள்ளது என்று ஊழல் எதிர்ப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் இந்த புகார் தொடர்பாக அரசு டிம்பர் கார்ப்பரேஷன் சேர்மன் பியதசா திசநாயக என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் புகார் அதிபர் சிறிசேனா கவனத்துக்கு வந்தவுடன் இருவரையும் உடனடியாக நீக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
திரிகோணமலையில் உள்ள கந்தேல் சர்க்கரை ஆலை 25 ஆண்டுகளாக செயலில் இல்லை. ஆனால் இதனை மீண்டும் செயல்படுத்துவதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகும் என்பதை உணர்ந்த இலங்கை அரசு முதலீடுகளை வரவேற்றது.
ஆனால் 2015 முதலே இந்த முயற்சி சர்ச்சைகளில் சிக்கிவருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT