Published : 14 May 2018 06:06 PM
Last Updated : 14 May 2018 06:06 PM
அமெரிக்காவில் அவசரப் போலீஸுக்கு தொலைபேசியில் அழைத்த ஒருவர் தான் வளர்த்த நாய் தன்னை சுட்டுவிட்டதாக பரபரப்புப் புகார் தெரிவித்ததால், போலீஸார் பதற்றமடைந்தனர்.
அமெரிக்காவின் ஐயோவா மாநிலம், போர்ட் டாட்ஜ் நகரைச் சேரந்தவர் ரிச்சார்ட் ரெம்மி. இவர் பிட்புல் மற்றும் லேப்ரடார் கலப்பின நாயை வளர்த்து வருகிறார். அதற்கு பாலி எனப் பெயரிட்டு இருந்தார்.
தினமும் அந்த நாய்க்கு ஓடுதல், சுவற்றில் ஏறி குதித்தல், கட்டளைக்கு கீழ்படிதல் உள்ளிட்ட பயிற்சிகளை ரிச்சார்ட் அளித்து வந்தார். இந்நிலையில், கடந்த 12-ம் தேதி ரிச்சார்ட் தனது லைசென்ஸ் துப்பாக்கியை இடுப்புப் பகுதியில் வைத்திருந்தார்.
அப்போது நாய்க்கு, மெத்தை, ஷோபா மீது பாய்ந்து தாவுதல் பயிற்சியை ரிச்சார்ட் அளித்து வந்தார். அப்போது ஷோபா மீது ரிச்சார்ட் படுத்திருந்தார். அவர் மீது தாவி, குதித்து விளையாடி வந்த நாய் பாலி திடீரென ரிச்சார்ட் மீது விழுந்து விளையாடியது.
அப்போது, ரிச்சார்டின் இடுப்புப் பகுதியில் வைத்திருந்த துப்பாக்கி தவறி கீழே விழுந்தபோது, துப்பாக்கி லோடு செய்யப்பட்டிருந்தது. அதை ரிச்சார்ட் எடுப்பதற்குள் அவரின் நாய் பாலி, அதை தனது காலால் எடுக்க முற்பட்டு துப்பாக்கியை இழுந்தது. அப்போது, நாயின் கால் நகம் துப்பாக்கியின் டிரிக்கரில் பட்டவுடன் அது வெடித்து, ரிச்சர்ட் வலது காலில் குண்டு பாய்ந்தது.
இதையடுத்து உடனடியாக உதவிக்காக 911 என்ற அவசர எண்ணுக்கு ரிச்சார்ட் அழைப்பு செய்தார். அவர்கள் வந்து ரிச்சார்டை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து ரிச்சார்ட் கூறுகையில், ''நான் வளர்க்கும் நாய் பாலிக்கு எப்போதும் போல்தான் பயிற்சி அளித்து வந்தேன். ஆனால், அன்று எனது இடுப்பிலிருந்த துப்பாக்கி லோடு செய்யப்பட்டிருந்தது. அந்த துப்பாக்கி கீழே வீழுந்ததும், அதே எடுக்க பாலி முற்பட்டபோது அது வெடித்தது.
துப்பாக்கிச் சத்தம் கேட்டு, என் காலில் குண்டுபாய்ந்ததும் ஏதோ தவறு நடந்துவிட்டது என்பதை அறிந்த எனது நாய் ஓ வென்று ஊளையிட்டு அழத்தொடங்கி, எனது காலின் அருகே படுத்துக்கொண்டது. அதன்பின் நான் அவசர எண்ணுக்கு அழைப்பு செய்து நாய் சுட்ட தகவலைக் கூறினேன்'' எனத் தெரிவித்தார்.
இது குறித்து நகர போலீஸ் அதிகாரி ஷானன் வாட்ஸ் கூறுகையில், ’’ரிச்சார்ட் எங்களுக்கு போன் செய்து நாய் சுட்டுவிட்டது என்று கூறியதும் என்ன இவர் உளறுகிறார் என்று நினைத்தோம். ஆனால், அவர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோதுதான் எங்களுக்கு அனைத்தும் புரிந்தது. இதற்கு முன் நாய் ஒருவரை சுட்டுவிட்டதாக நான் கேட்டதே இல்லை. இருந்தாலும், எதிர்பாராத விபத்து என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து இருக்கிறோம். கவனக்குறையாக நடந்து கொள்ளக்கூடாது என்று ரிச்சார்டுக்கு அறிவுறுத்தியுள்ளோம்’’ எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT