Published : 15 Jun 2024 03:31 PM
Last Updated : 15 Jun 2024 03:31 PM

இது காஸாவின் ஒலி

ரோம் நகரம் எரிந்துகொண்டிருக்கும்போது நீரோ மன்னன் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான் என்பார்கள். ஆனால், காஸா மீதான தாக்குதலின் வலியைத் தனது ஆத்மார்த்தமான இசையின் மூலம் உலக நாடுகளுக்குக் கொண்டு சென்று வருகிறார் ரஹாஃப் ஃபதி நாசர்.

அல் அசார் பல்கலைகழக்கத்தின் மருத்துவ மாணவியான ரஹாஃப், காஸா - இஸ்ரேல் போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மாணவர்களின் முகமாக அறியப்படுகிறார். இஸ்ரேல் தாக்குதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட காஸாவிலிருந்து பாலஸ்தீனத்தின் பிற பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களுள் ரஹாஃப்பும் ஒருவர்.

வான்வழித் தாக்குதலில் சிதைந்த கட்டிடங்களுக்கு மத்தியில் கிடாரை வாசித்துக்கொண்டே ரஹாஃப் அளிக்கும் செய்தி உலக மக்கள் அனைவருக்குமானது.

இது குறித்து ரஹாஃப், “இஸ்ரேலின் தாக்குதலால் எனது வீடும் தரைமட்டமாகிவிட்டது. சிறு வயதிலிருந்து நான் பயன்படுத்திய இசைக் கருவிகள் பலவும் சேதமடைந்துவிட்டன. எங்களைச் சுற்றி தினமும் நூற்றுக்கணக்கில் குண்டு மழை பொழிந்து வருகிறது. அந்த அளவுக்கு இஸ்ரேல் இடைவிடாது தாக்குதலைத் தொடுத்துவருகிறது. உலக நாடுகள் என் இசையை கேட்கின்றனவோ இல்லையோ நான் தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருப்பேன்.என் இசை போருக்கு எதிரானது” எனத் தெரிவித்திருக்கிறார்.

தொடரும் போர்: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் வெடிக்க இத்தாக்குதலே வழிவகுந்தது. இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1,500 பேர் பலியாகினர். 250 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

ஹமாஸின் தாக்குதலுக்கு எதிர்வினையாற்றிய இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் பாலஸ்தீனத்தில் 37,000 பேர் பலியாகினர். போர் தொடர்ந்துவரும் சூழலில் காஸாவின் ரஃபா பகுதியில் ஹமாஸ் நிலைகள் மீது தீவிர வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் தொடுத்துவருகிறது.

இந்நிலையில்தான், “காஸாவின் ரஃபாவில் இஸ்ரேலின் தாக்குதல் பேரழிவுக்கு வழிவகுக்கும். உணவுப் பற்றாக்குறையின் தீவிரப்பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவும் பணிகளை இந்தத் தாக்குதல் கடுமையாகப் பாதிக்கும்” என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டர்ஸ் தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x