Published : 11 Jun 2024 06:46 PM
Last Updated : 11 Jun 2024 06:46 PM

ஏமன் கடல் பகுதியில் புலம்பெயர்வோர் படகு மூழ்கி 49 பேர் பலி; 140 பேரை காணவில்லை: ஐ.நா.

பிரதிநிதித்துவப் படம்

சனா(ஏமன்): சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த புலம்பெயர்வோரை ஏற்றிக்கொண்டு வந்த படகு ஒன்று ஏமன் அருகே கடலில் மூழ்கியதில் குறைந்தது 49 பேர் உயிரிழந்ததாகவும், 140 பேரை காணவில்லை என்றும் புலம்பெயர்வோருக்கான ஐநா சர்வதேச அமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சோமாலியாவின் வடக்கு கடற்கரையிலிருந்து சுமார் 260 சோமாலியர்கள் மற்றும் எத்தியோப்பியர்களை ஏற்றிக்கொண்டு ஏடன் வளைகுடா வழியாக படகு ஒன்று பயணித்தது. 320 கிலோமீட்டர் பயணித்த நிலையில் அந்த படகு, ஏமனின் தெற்கு கடற்கரையில் திங்கள்கிழமை மூழ்கியது. இதில், குறைந்தது 49 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். 140 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படகில் பயணித்தவர்களில் இதுவரை 71 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் 3க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய புலம்பெயர்வோருக்கான ஐநா சர்வதேக அமைப்பின் செய்தித்தொடர்பாளர் முகமதலி அபுனஜெலா, "புலம்பெயர்வோர் எதிர்கொள்ளும் சவால்களுக்கு விரைவாக தீர்வு காண்பதற்கான மற்றுமொரு நினைவூட்டலாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. அவசரமாக புலம்பெயர்வோர் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காண்பதோடு, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசரத் தேவை எழுந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

"பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. யேமனில் ஏறக்குறைய 10 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் இருந்தபோதிலும், 2021 முதல் 2023 வரை ஆண்டுதோறும் அந்நாட்டுக்கு வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 27,000 இலிருந்து 90,000 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 3,80,000 புலம்பெயர்ந்தோர் தற்போது ஏமனில் உள்ளனர்" என்று புலம்பெயர்வோருக்கான ஐநா சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x