Published : 11 Jun 2024 05:35 AM
Last Updated : 11 Jun 2024 05:35 AM

அசோக் எல்லுசாமி இல்லையென்றால் டெஸ்லா நிறுவனம் இல்லை: தமிழக பொறியாளருக்கு எலன் மஸ்க் புகழாரம்

வாஷிங்டன்: உலக பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ள அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்கின், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் சமூக வலைதளம், ஓபன் ஏஐ, நியூரோலிங்க், தி போரிங் நிறுவனங்களிலும் இந்தியவம்சாவளியினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். எலனுக்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது.

வரும் ஆகஸ்ட் மாதம் டெஸ்லா சார்பில் ஓட்டுநர் இல்லாத கார் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கார்செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தானாகவே இயங்கும் திறன் கொண்டதாகும்.

டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோபைலட் குழுவின் தலைவராக தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட அசோக் எல்லுசாமி பதவி வகிக்கிறார். சென்னையில் பிறந்த அவர், கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் (2005-2009) மின்னணு, தகவல்தொடர்பில் பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்காவுக்கு சென்றஅவர், கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் (2012-2013) ரோபோடிக் சிஸ்டம்ஸ் படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றார்.

முதலில் வோல்ஸ்வேகன் கார் நிறுவனத்தில் பணியாற்றிய அசோக் எல்லுசாமி கடந்த 2014-ம் ஆண்டில் எலக் மஸ்கின் டெஸ்லா கார் நிறுவனத்தில் இணைந்தார். கடந்த 2022-ம் ஆண்டில் டெஸ்லா நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத காரை தயாரிக்க சிறப்பு குழு உருவாக்கப்பட்டது. அந்த குழுவின் தலைவராக அசோக் எல்லுசாமி நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான குழுவின் அயராத உழைப்பின் பலனாக வரும் ஆகஸ்ட் மாதம் டெஸ்லா நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத கார் அமெரிக்காவில் அறிமுகமாக உள்ளது.

இந்த சூழலில் டெஸ்லா நிறுவனதலைவர் எலன் மஸ்க் சமூக வலைதளத்தில் நேற்று முன்தினம் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

அசோக் எல்லுசாமிக்கு நன்றி. டெஸ்லா ஏஐ/ஆட்டோபைலட் குழுவில் முதல் நபராக அவர் இணைந்தார். அதன்பிறகு அந்த குழுவின் தலைவராக உயர்ந்தார். அவரும்அவரது குழுவும் இல்லையென்றால் டெஸ்லா இல்லை.

அவர் இல்லையென்றால் டெஸ்லா சாதாரண கார் உற்பத்தி நிறுவனமாக மட்டுமே இருந்திருக்கும். தானியங்கி காருக்கான தொழில்நுட்பத்துக்காக தேடி அலைந்து கொண்டு இருந்திருப்போம். ஆனால் அத்தகைய நவீன தொழில்நுட்பத்தை வழங்கும் நிறுவனம் இப்போதைக்கு இல்லை. இவ்வாறு எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x