Published : 03 Jun 2024 11:48 AM
Last Updated : 03 Jun 2024 11:48 AM
புதுடெல்லி: இஸ்ரேலியர்கள் மாலத்தீவுக்குள் நுழைவதைத் தடை செய்யும் வகையிலான சட்டத்தை முன்மொழிய அந்நாடு திட்டமிட்டுள்ளது. இதனிடையே மாலத்தீவில் இருக்கும் தங்கள் குடிமக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.
காசா - இஸ்ரேல் போர் இன்னும் நீடித்துவரும் நிலையில், கடந்த மே 26 ஆம் தேதி ரஃபா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து உலக நாடுகளின் கவனம் ரஃபாவின் பக்கம் திரும்பியது. அண்மையில், ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகள் கூட்டாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. இருப்பினும் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து தான் வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் மக்கள் தங்கள் நாட்டுக்கு வருவதைத் தடை செய்யும் வகையில் சட்டங்களைத் திருத்த நேற்று அதிபர் முய்சு தலைமையிலான மாலத்தீவு அரசு முடிவு செய்தது. மேலும், பாலஸ்தீனர்களுக்காக நிதி திரட்டவும் மாலத்தீவு அறிவித்துள்ளது. அதற்காக ஒரு தூதரும் நியமிக்கப்படவிருக்கிறார். இது தொடர்பான தகவல் வெளியான நிலையில், தற்போது மாலத்தீவில் தங்கியுள்ள இஸ்ரேல் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுவது குறித்துப் பரிசீலிக்குமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம், “மாலத்தீவு கொண்டு வர உள்ள சட்டத் திருத்தங்களால் தற்போது அங்குள்ள இஸ்ரேல் மக்கள் சிக்கலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் மாலத்தீவில் உள்ள இஸ்ரேலியர்கள் அங்கிருந்து வெளியேறுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 11,000 இஸ்ரேலியர்கள் மாலத்தீவுக்கு பயணம் செய்துள்ளனர். இது மொத்த சுற்றுலா பயணிகளின் வருகையில் 0.6% ஆகும். இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மாலத்தீவுக்கு வருகை தரும் இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலத்தீவில் முஸ்லிம் மக்கள் தொகையே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT