Published : 21 Aug 2014 10:00 AM
Last Updated : 21 Aug 2014 10:00 AM

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த 111 வயது ஜப்பான் தாத்தா

உலகிலேயே மிக முதிய ஆண் ஜப்பானில் வசிக்கிறார். அவருக்கு வயது 111. இதை கின்னஸ் சாதனைப் புத்தகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜப்பான் நாட்டின் ஃபுகுஷிமாவில் 1903, பிப்ரவரி 5ம் தேதி சகாரி மோமோய் பிறந்தார். இவர் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். பல ஆண்டுகளுக்கு முன்பு

இவர் டோக்கியோவுக்கு இடம்பெயர்ந்தார். இவருக்குத் தற்போது 111 வயதாகிறது. எனவே, இந்தச் சாதனையைப் பாராட்டி கின்னஸ் அவருக்குச் சான்றிதழ் வழங்கியுள்ளது.

கேட்கும் திறன் குறைந்திருக்கிறது என்பதைத் தவிர தான் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், தன்னுடைய நேரத்தைப் புத்தகங்கள் வாசிப்பதிலும், தொலைக்காட்சி பார்ப்பதிலும் செலவிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கின்னஸ் சான்றிதழ் பெறும் விழாவின்போது, "இன்னும் இரண்டு ஆண்டுகள் வாழ ஆசைப்படுகிறேன்" என்று மோமோய் கூறியுள்ளார்.

இவருக்கு முன்பு இந்தச் சாதனையைப் படைத்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த அலெக்சாண்டர் இமிச் ஆவார். இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அவர் இறந்தார். அவர் மோமோய் பிறப்பதற்கு முந்தைய தினம் பிறந்தவர் ஆவார். அவரின் இறப்பைத் தொடர்ந்து உலகின் மிக முதிய ஆணாக மோமோய் பட்டம் வென்றிருக்கிறார்.

இந்தச் சாதனையின் மூலம் உலகின் மிக முதிய ஆணும், மிக முதிய பெண்ணும் ஜப்பானில் இருக்கிறார்கள் என்ற பெருமை அந்நாட்டிற்குக் கிடைத்துள்ளது. உலகின் முதிய பெண் மிஸாவோ ஒகாவாவுக்கு 116 வயதாகிறது.

2013ம் ஆண்டு இறந்துபோன உலகின் மிக முதிய ஆண் ஜிரோமோன் கிமுராவும் ஜப்பானைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இறந்தபோது அவருக்கு 116 வயதாகியிருந்தது.

ஜப்பான் மக்கள்தொகையில் 65 வயதுக்கு மேல் உள்ளவர்களின் எண்ணிக்கை கால்வாசியாக‌ உள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்த சில பத்தாண்டுகளில் 40 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x