Published : 29 May 2024 03:11 PM
Last Updated : 29 May 2024 03:11 PM
சான் பிரான்சிஸ்கோ: தனது சொத்துகளில் 50 சதவீதத்துக்கும் மேலான பங்கினை நன்கொடையாக வழங்க ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் உறுதி ஏற்றுள்ளார். இது குறித்த தகவலை கிவிங் பிலெட்ஜ் என்ற தன்னார்வ அமைப்பு உறுதி செய்துள்ளது.
அவரது இணையர் ஆலிவர் முல்ஹெரினும் இந்த உறுதி பத்திரத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ல் ஓபன் ஏஐ நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்போது முதல் அந்த நிறுவனத்துடன் சாம் ஆல்ட்மேன் பணியாற்றி வருகிறார். இது தவிர மேலும் இரண்டு நிறுவனங்களில் தலைவர் பொறுப்பை நிர்வகித்து வருகிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 100 கோடி டாலர்கள்.
தங்களது நன்கொடை தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த ஆதரவாக இருக்கும் என்றும், அது சமூகத்துக்கு உதவும் என நம்புவதாகவும் ஆல்ட்மேன் மற்றும் முல்ஹெரின் இணையர் தெரிவித்துள்ளனர். இதை செய்வதில் தங்களுக்கு பெருமை என்றும் சொல்லியுள்ளனர். இவர்களை போலவே பல்வேறு செல்வந்தர்கள் மற்றும் பிரபலங்கள் கிவிங் பிலெட்ஜ் அமைப்புக்கு தங்களது சொத்துகளை நன்கொடையாக வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர்.
கிவிங் பிலெட்ஜ் அமைப்பு கடந்த 2010-ல் தொடங்கப்பட்டது. பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் இணைந்து இதை தொடங்கி இருந்தனர். இந்த அமைப்பின் மூலம் உலக அளவில் உள்ள செல்வந்தர்கள் பலர் தங்களது சொத்தில் பெரும் பங்குகளை அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT