Published : 29 May 2024 09:29 AM
Last Updated : 29 May 2024 09:29 AM

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க புதிய நீர்மூழ்கியை வடிவமைக்கும் கோடீஸ்வரர்

ஓஹையோ: அமெரிக்காவின் ஓஹையோ பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் கோடீஸ்வரரான லேரி (Larry Connor), கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க புதிய நீர்மூழ்கி ஒன்றை வடிவமைத்து வருகிறார். இதன் மூலம் வரும் 2026-ம் ஆண்டு கடலுக்கு அடியில் அவர் செல்ல திட்டமிட்டுள்ளார்.

74 வயதான அவர், சாகச பிரியர். டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக ட்ரைடன் சப்மரைன்ஸ் என்ற நிறுவனத்தை அவர் அணுகியுள்ளார். அவருக்காக வடிவமைக்கப்பட்டு வரும் இந்த நீர்மூழ்கியில் இரண்டு பேர் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Acrylic-hulled வகையில் இந்த நீர்மூழ்கி இருக்கும் என தெரிகிறது. பலகட்ட சோதனை மேற்கொண்ட பிறகு, முறையாக சான்று பெற்று ஆழ்கடல் சாகசத்துக்கு இந்த நீர்மூழ்கி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் சுமார் 12,500 அடி ஆழத்தில் செல்லும் இந்த நீர்மூழ்கி வெறும் பயணமானதாக மட்டுமல்லாமல் அறிவியல் பூர்வமான ஆய்வுகளும் மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

இது குறித்து லேரி தெரிவித்துள்ளதாவது. டைட்டானிக் கப்பலை பார்க்க செல்லும் வெறும் பயணம் அல்ல. இது ஆய்வு சார்ந்த மிஷன். இதன் மற்றொரு நோக்கம் என்னவென்றால் பாதுகாப்பான முறையில் ஆழ்கடலுக்கு பயணிக்கலாம் என்பதை உலகுக்கு நிரூபிப்பது. இதன் மூலம் மீண்டும் மீண்டும் ஆழ்கடல் பயணம் மேற்கொள்ள முடியும் என கூறியுள்ளார்.

இந்த நீர்மூழ்கிக்கு ‘தி எக்ஸ்புளோரர் - ரிட்டர்ன் டு தி டைட்டானிக்’ என பெயர் வைத்துள்ளதாக தகவல். மேலும், சுமார் 2 மணி நேரத்தில் கடலில் 13,000 அடி ஆழம் வரை இதில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைட்டன்: ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலை பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற நிறுவனம் கடந்த ஆண்டு மேற்கொண்டது. இதற்காக 21 அடி நீளத்தில் ‘டைட்டன்’ என்ற சிறப்பு நீர்மூழ்கியை அந்த நிறுவனம் தயாரித்திருந்தது. கடந்த ஆண்டு இதில் ஐந்து பேர் பயணம் மேற்கொண்ட நிலையில் அதன் தகவல் தொடர்பு துண்டானது. தீவிர தேடுதலுக்கு பிறகு அவர்கள் ஐந்து பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x