Published : 30 Apr 2018 08:04 AM
Last Updated : 30 Apr 2018 08:04 AM
உ
லக அரசியல் பல விசித்திரங்களைக் கண்டு இருக்கிறது. அவற்றில் ஒன்று தற்போது அரங்கேறி இருக்கிறது. வட கொரியா - தென் கொரியா இடையே ஏற்பட்டுள்ள சமாதானம். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உட்பட பலரும் எதிர்பாராத திடீர் திருப்பம்.
அணு ஆயுதம், ஏவுகணைகள், ரசாயன ஆயுத தாக்குதல்கள் என்றெல்லாம் மிரட்டிக் கொண்டு இருந்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தடாலடியாக இறங்கி வந்து தனது எதிரி தென் கொரியாவுடன் கொஞ் சிக் குலாவுகிறார். ‘எங்களது நடவடிக்கைகளால், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் பல முறை அதிகாலை உறக்கத்தில் தொந்தரவு செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். இனி அத்தகைய தொந்தரவு இருக்காது என்பதை உறுதி செய்கிறேன்’ என்று கிம் ஜாங் உன் அறிவித்து இருக்கிறார்.
உண்மையிலேயே மிக நல்ல செய்தி. கொரிய தீபகற்பம் இனி அணு ஆயுதம் இல்லாத பகுதியாக விளங்கும். ஓராண்டுக்குள் அனைத்து அணு ஆயுதங்களையும் விலக்கிக் கொள்ள இரு கொரியத் தலைவர்களும் உடன்பட்டு இருக்கிறார்கள். கொரியப் போரை அதிகாரபூர்வ முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவுடன் பேசவும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. ஏறத்தாழ 60 ஆண்டுகளாக நிலவி வரும் இரு நாட்டு சண்டை முடிவுக்கு வந்து அமைதிக்கான சூழல் உருவாகி உள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர் வரை, தீவிரமான ஆக்கிரமிப்புப் போக்கைக் கடைப்பிடித்து வந்த வட கொரியா, குறிப்பாக கிம் ஜாங் உன், முற்றிலும் எதிர்த் திசையில் பயணிக்கத் தொடங்கி இருப்பதன் காரணம்? பொருளாதாரம்! தென் கொரியாவுடன் ஒப்பிடும்போது, வட கொரியாவின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கி உள்ளது. போதாக் குறைக்கு ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, ஜப்பான் ஆகியன வட கொரியாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை கட்டவிழ்த்து விடத் தயாராக உள்ளன.
ஆயுதக் குவிப்பிலும் போர்த் தயாரிப்பு நடவடிக்கைகளிலும் வட கொரிய மக்களுக்குச் சற்றும் ஆர்வம் இல்லை. தங்களின் அன்றாட வாழ்க்கையே மிகப் பெரிய போராட்டமாக இருக்கும்போது, தேசிய பெருமை எல்லாம் அவர்களைச் சிறிதும் ஈர்க்கவில்லை. தனது சொந்த நாட்டிலேயே மக்களின் நம்பிக்கையை இழந்து வருகிற சூழலில், கிம் ஜாங் உன், ‘உருப்படியாக’ ஏதேனும் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.
சாமானிய மக்களின் பொருளாதார நிலை உயர்ந்தாக வேண்டும். அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும். இதனை வழங்க முடிந்தால் மட்டுமே ‘வண்டி ஓடும்’. பொருளாதார வளர்ச்சி மட்டுமே மக்களை அமைதிப்படுத்தும். இந்த உண்மையை காலம் தாழ்ந்து இப்போதுதான் அதிபர் கிம் ஜாங் உன் உணரத் தொடங்கி இருக்கிறார்.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் தமது பொருளாதாரத்தை பாதிக்காத வகையில் வெளியுறவுக் கொள்கையை வகுத்துக் கொண்டு செயல்படுகின்றன. வெளியில் பரம வைரிகளாக விளங்கும் அமெரிக்காவும் சீனாவும், தங்களுக்குள் மிகப் பெரிய வணிகப் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். அமெரிக்க முதலீடும் சீனப் பொருட்களுக்கான சந்தை விரிவாக்கமும் கை கோர்த்துச் செல்கின்றன.
தென் கொரியாவின் வளர்ச்சியில் முக்கிய இடம் வகிப்பது அந்த நாட்டுத் தலைமை காட்டிய அரசியல் முதிர்ச்சி. பதிலுக்கு பதில், கண்ணுக்குக் கண் என்றெல்லாம் வம்புச் சண்டையில் மாட்டிக் கொண்டு நாட்டின் நிதியை வீணடிக்க தென் கொரியா முயற்சிக்கக் கூட இல்லை. அதன் கவனம் மொத்தமும் பொருளாதாரத்தில் மட்டுமே குவிந்து இருந்தது. விளைவு...? வளர்ந்த பொருளாதார நாடாக உயர்ந்து நிற்கிறது.
இதே பாதையில், தானும் பயணிக்க முடிவு செய்து விட்டார் கிம் ஜாங் உன். அதற்கான தொடக்கம்தான் தென் கொரியாவுடன் சமாதானம். இதன் மூலம் கணிசமான அளவில் பாதுகாப்பு செலவினங்களைக் குறைத்து, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்ய முடியும். இதேபோன்று, அமெரிக்க எதிர்ப்பையும் கைவிடத் தயாராகி விட்டார் கிம் ஜாங் உன். இதனால் தம் நாட்டுக்குத் தேவையான முதலீடுகளை அதிக அளவில் கொண்டு வர முடியும் என்று அவர் கருதலாம்.
கொரிய தீபகற்பத்தில் அமைதி, ஆசிய மண்டலத்தில் ஸ்திரத்தன்மை, மேம்பட்ட பொருளாதார சமநிலைக்கு நிச்சயமாக வழி கோலும். பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் இன்னமும் நிறைய இருக்கலாம். அதற்கு இன்னமும் நிறைய கால அவகாசம் இருக்கிறது. ஒன்று மட்டும் உறுதி. அமைதி, சமரச உடன்பாட்டில் யாருக்கும் தோல்வி இல்லை. இரு சாராருக்கும் நன்மை. இரு நாட்டுக்கும் வெற்றி. ஆகவே இந்த நிலை இனி வலுவடையவே செய்யும். நம்பலாம். நிறைவாக... வட கொரியா - தென் கொரியா சமாதான உடன்பாடு, இந்திய, பாகிஸ்தானிய தலைவர்களையும் அமைதியின் பக்கம் திருப்புமா..?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT