Published : 20 May 2024 04:32 PM
Last Updated : 20 May 2024 04:32 PM
காஸா: ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியின் மறைவுக்கு ஹமாஸ் இரங்கல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் உடனான போரில் தங்களுக்கு ஆதரவு வழங்கியதாகவும் அவர் குறித்த நினைவுகளை ஹமாஸ் பகிர்ந்துள்ளது.
பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை தடுக்க அரசியல் ரீதியாக தங்களுக்கு ஆதரவு வழங்கியதாக காசாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. இப்ராஹிம் ரெய்சி உடன் விபத்தில் உயிரிழந்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைனின் ஆதரவும் தங்களுக்கு இருந்ததாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான மோதல் தொடங்கியது. அப்போது முதலே தங்களுக்கு ஈரான் ஆதரவு வழங்கி வருவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு நிதி மற்றும் ராணுவ உதவியை ஈரான் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலை வெற்றிகரமாக ஹமாஸ் தாக்கியது என்றும். அதில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் ஈரான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு இஸ்ரேல் நாட்டை நேரடியாக தாக்கி இருந்தது ஈரான். தங்கள் மீது இஸ்ரேல் தரப்பில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை ஈரான் மேற்கொண்டது. இஸ்ரேலின் வடக்கு எல்லையோர பகுதியில் இயங்கி வரும் ஹிஸ்புல்லாவுக்கும் ஈரான் ஆதரவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT