Published : 20 May 2024 10:57 AM
Last Updated : 20 May 2024 10:57 AM

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியின் மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “இந்தியா - ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த இப்ராஹிம் ரெய்சி மேற்கொண்ட பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்” என்று தனது இரங்கல் செய்தியில் பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் இப்ராஹிம் ரெய்சியின் துயரமான மறைவு ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அளிக்கிறது. இந்தியா - ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த இப்ராஹிம் ரெய்சி மேற்கொண்ட பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த அதிபர்: ஈரான் நாட்டின் எட்டாவது அதிபர் இப்ராஹிம் ரெய்சி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அவர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

முன்னதாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் அதன் பாகங்கள் இன்று (திங்கள்கிழமை) அடையாளம் காணப்பட்டன. இந்தச் சூழலில் விபத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக அந்த நாட்டு ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அஜர்பைஜான் நாட்டுக்குச் சென்ற அதிபர் ரெய்சி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் நாடு திரும்பி கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. சுமார் 17 மணி நேர தேடுதலுக்குப் பிறகு ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் முழுவதும் தீயில் கருகி உருக்குலைந்து காட்சி அளிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x