Published : 18 May 2024 10:01 AM
Last Updated : 18 May 2024 10:01 AM
புதுடெல்லி / இஸ்லாமாபாத்: கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் வெடித்துள்ள கலவரத்தை ஒட்டி அங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பத்திரமாக இருக்கும்படி இந்தியா, பாகிஸ்தான் அறிவுரை வழங்கியுள்ளது.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் சர்வதேச மாணவர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனை ஒட்டியே இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் தத்தம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளன.
கடந்த மே 13 ஆம் தேதி கிர்கிஸ்தான் - எகிப்து மாணவர்கள் இடையேயான மோதல் தொடர்பான வீடியோ வைரலான நிலையில் கிர்கிஸ்தான் மாணவர்கள் வெளிநாட்டு மாணவர்களைத் தேடித்தேடி தாக்கும் சூழல் நிலவுவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கிர்கிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நாங்கள் நம் மாணவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். இப்போதைக்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. இருப்பினும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளோம். அவசரத் தேவைகளுக்கு தூதரகத்தை தொடர்பு கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் எண் வழங்கியுள்ளோம். 0555710041 என்ற எண்ணில் மாணவர்கள் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளது.
சில மருத்துவப் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கும் விடுதிகள் தாக்கப்பட்டுள்ளன. சில சமூகவலைதள வீடியோக்களில் பாகிஸ்தான் மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் பாகிஸ்தான் மாணவிகள் சிலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அங்கு பயிலும் சர்வதேச மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தூதரகம் விடுத்துள்ள செய்தியில், “பிஷ்கேக்கில் எல்லா வெளிநாட்டு மாணவர்களையும் குறிவைத்தே தாக்குதல் நடத்தப்படுகிறது. பாகிஸ்தான் மாணவர்களை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை. இருப்பினும் பாக்., மாணவர்கள் அமைதி திரும்பும்வரை வெளியில் வராமல் அவரவர் இருக்கும் இடங்களிலேயே பத்திரமாக இருக்கலாம்” என வலியுறுத்தியுள்ளது.
கிரிகிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதர் ஹஸன் ஸாய்கம் உள்ளூர் பாதுகாப்புப் படையினருடன் சமரசம் பேசி பாகிஸ்தான் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT