Published : 13 May 2024 06:15 PM
Last Updated : 13 May 2024 06:15 PM
காத்மாண்டு: நேபாள நாட்டின் புதிய 100 ரூபாய் நோட்டு வரைபடத்தில் சர்ச்சைக்குரிய லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி ஆகிய இந்திய பகுதிகள் அடங்கிய வரைபடத்தை இணைத்து அச்சடிக்கிறது அந்த நாடு. அரசின் அந்த முடிவை அதிபர் ராம்சந்திர பவ்டெலின் பொருளாதார ஆலோசகர் சிரஞ்சீவி விமர்சித்திருந்தார். இந்நிலையில், அவர் பதவி விலகி உள்ளார்.
“பொருளாதார நிபுணர் மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் என்ற முறையில் புதிய 100 ரூபாய் நோட்டு அச்சடிக்கும் முடிவு குறித்து நான் எனது கருத்தை தெரிவித்தேன். அதை சர்ச்சையாக்கும் வகையில் சிலர் திரித்து பரப்பியுள்ளனர். அது என்னை வருத்தமடைய செய்தது. அதற்கான பொறுப்பை ஏற்று நான் பதவி விலகுகிறேன்.
அரசு தரப்பில் வரைபடம் சார்ந்த விவாதம் நடைபெற்று வரும் வேளையில் இந்த செயல்கள் நாட்டுக்கும், மக்களுக்கும் நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கக்கூடும் என்பதை நாட்டின் குடிமகனாக எனது கருத்தின் மூலம் மக்களுக்கு உணர்த்த விரும்பினேன். மற்றபடி இதில் வேறு எதுவும் நான் சொல்லவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 2020, ஜூன் 18-ம் தேதி நேபாளம் அதன் அரசியல் அமைப்பை திருத்துவதன் மூலம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி ஆகிய மூன்று பகுதிகளை உள்ளடக்கிய நாட்டின் அரசியல் வரைபடத்தைப் புதுப்பிக்கும் பணியை நிறைவு செய்தது. இதற்கு இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றியது.
நேபாளத்தின் பிராந்திய எல்லையை நீட்ட கோரும் செயற்கை விரிவாக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தது. இந்தச் சூழலில் புதிய 100 ரூபாய் நோட்டு வரைபடத்தில் சர்ச்சைக்குரிய பகுதியை சேர்த்து அச்சிடுவது குறித்து அண்மையில் அந்த நாட்டு அமைச்சரவை முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT