Published : 13 May 2024 04:29 PM
Last Updated : 13 May 2024 04:29 PM

பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக் கொண்ட நபர் உயிரிழப்பு!

பாஸ்டன்: அமெரிக்க நாட்டில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக் கொண்ட நபர் உயிரிழந்துள்ளார். அவருக்கு கடந்த மார்ச் மாதம் பன்றியின் சிறுநீரக உறுப்பு உடலில் அறுவை சிகிச்சை மூலமாக பொருத்தப்பட்டது.

62 வயதான ரிக் ஸ்லேமேன் எனும் நபர்தான் உலகில் முதன்முதலாக பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஸ்டன் நகரில் உள்ள மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் சுமார் 4 மணி நேரம் அவருக்கு உறுப்பு மாற்று சிகிச்சையின் மூலம் பன்றியின் சிறுநீரகத்தை மருத்துவர்கள் பொருத்தி இருந்தனர். மருத்துவ துறையில் இது முக்கிய மைல்கல் சாதனையாக பார்க்கப்பட்டது.

இந்தச் சூழலில் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இரண்டு மாத காலத்துக்குள் அவர் உயிரிழந்தார். உறுப்பு மாற்று சிகிச்சையின் விளைவுதான் அவரது மரணத்துக்கு காரணம் என சொல்வதற்கான எந்த அறிகுறியும் கண்டறியப்படவில்லை என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

“ரிக் உயிரிழந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் மாற்று உயிரின உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ள அவரது செயல் பலரையும் ஊக்கப்படுத்தும்” என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2018-ல் இதே மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருந்தும் ஐந்து ஆண்டுகளில் அது செயலிழந்துள்ளது. அதன் காரணமாக அவருக்கு உடல் ரீதியான பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து டயலஸிஸ் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கடந்த மார்ச் மாதம் பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது.

கடந்த 2022-ல் அமெரிக்காவின் மேரிலேண்ட் மருத்துவமனையில் பன்றியின் இதயம் நோயாளி ஒருவருக்கு பொருத்தப்பட்டது. அவரும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இரண்டு மாத காலத்தில் உயிரிழந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x