Last Updated : 11 Apr, 2018 06:11 PM

 

Published : 11 Apr 2018 06:11 PM
Last Updated : 11 Apr 2018 06:11 PM

அல்ஜீரிய நாட்டு ராணுவ விமான விபத்தில் 257க்கும் மேற்பட்டோர் பலி

வடஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் ராணுவ விமானம் ஒன்று இன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் 257-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அல்ஜீரியா நாட்டின் வடபகுதியில் தலைநகர் அல்ஜீயர்ஸ் அமைந்துள்ளது. இந்த நகருக்கு அருகே இருக்கும் போபரிக் ராணுவ விமானத் தளத்தில் இருந்து இன்று காலை ராணுவத்துக்கு சொந்தமான ரஷியாவடிவமைத்த II-76 என்ற விமானம் மேற்கு அல்ஜீரியா எல்லையான, டின்டாப் நகருக்கு புறப்பட்டது. .

இந்த விமானத்தில், 200க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், போலிசாரியோ முன்னணி என்ற பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் 20-க்கும் மேற்பட்டோர், விமானப் பணியாளர்கள் 10 பேர் என 250க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

விமானம் போஃபரிக் விமானத் தளத்தில் இருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் 30 கி.மீ தொலைவில் திறந்தவெளிப்பகுதியில் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 250-க்கும் மேற்பட்டோரும் இறந்ததாக அல்ஜீரிய நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

இந்த விமான விபத்துக்கான காரணம் என்ன எனத் தெரியவில்லை. விமானத்தில் மொத்தம் எத்தனை வீரர்கள், பயணிகள் பயணித்தார்கள் என்ற உறுதியான பட்டியலையும் அல்ஜீரிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இது குறித்து அல்ஜீரியாவில் ஆளும் கட்சியான எப்எல்என் கட்சி உள்நாட்டு தொலைக்காட்சியான எனஹாருக்கு அளித்த பேட்டியில், இந்த விமான விபத்தில் பொலிசாரியோ அமைப்பைச் சேர்ந்த 26பேரும் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் மொராக்கோவுக்கு அருகே இருக்கும் மேற்கு சஹாரா பகுதியில் சுதந்திரம் வேண்டிய போராடும் குழுவைச் சேர்ந்தவர்கள்.

மேற்கு சஹாரா பகுதியில் உள்ள அல்ஜீரியாவின் எல்லை ஓரப் பகுதியான டின்டாப் பகுதியில்தான் பொலிசாரியோ அமைப்பைச் சேர்ந்தவர்கள், மொராக்கோ நாட்டை ஒட்டிய பகுதியில் சுயாட்சி கேட்டு போராடி வருகிறார்கள். இவர்களுக்கு அல்ஜீரிய அரசு ஆதரவு தெரிவித்து வருகிறது.

விபத்துக்கு நடந்த இடத்துக்கு ஏராளமான ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விபத்தில் பலியானவர்கள் உடல்கள் வெள்ளைத்துணியில் சுற்றப்பற்று நீண்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்டுப்பணிகள் நடந்துவருவதால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x