Published : 10 May 2024 10:47 AM
Last Updated : 10 May 2024 10:47 AM

மரபணு சிகிச்சைக்குப் பிறகு செவித்திறன் பெற்ற சிறுமி @ பிரிட்டன்

கேம்பிரிட்ஜ்: செவித்திறன் இல்லாமல் பிறந்த 18 மாத சிறுமி ஒருவருக்கு நவீன மரபணு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு அவர் செவித்திறன் பெற்றுள்ளார்.

இந்த சிகிச்சையின் மூலம் இயல்பானவர்கள் பெற்றுள்ள செவித்திறன் அளவுக்கு மிக நெருக்கமான நிலைக்கு அந்த சிறுமியின் செவித்திறன் செயல்பாடு அமைந்துள்ளதாக காது அறுவை சிகிச்சை நிபுணர் மனோகர் பான்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் ஒபல் சான்டி. பிறந்து 18 மாதமான அவருக்கு ஆடிட்டரி நியூரோபதி என்ற பாதிப்பின் காரணமாக காதில் இருந்து மூளைக்குச் செல்லும் நரம்பில் பாதிப்பு இருந்துள்ளது. இந்த பாதிப்பு காரணமாக செவித்திறன் இல்லாமல் அவர் பிறந்தார்.

இந்த சூழலில் கேம்பிரிட்ஜ் பகுதியில் உள்ள அடன்புரூக்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரை அழைத்து சென்றுள்ளனர். அங்குதான் அவருக்கு இந்த மரபணு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மனோகர் பான்ஸ் தலைமையிலான மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்த சிகிச்சையின் முடிவுகள் தாங்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் சிறந்த முடிவுகளை தந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வகை மரபணு சிகிச்சையின் மூலம் செவித்திறன் பாதிப்பு உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முடியும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பயோடெக் நிறுவனமான ரீஜெனெரானால் இந்த மரபணு சிகிச்சை முறையை வடிவமைத்ததாக மனோகர் பான்ஸ் தெரிவித்துள்ளார். இதே முறையின் கீழ் சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இந்த சிகிச்சையின் கீழ் செவித்திறன் பெற்ற உலகின் முதல் நபராக ஒபல் இருப்பதாக மனோகர் பான்ஸ் சொல்கிறார். மேலும், இந்த சிகிச்சையை பெற்ற உலகின் இளம் வயது நபரும் ஒபல் தான் என அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x