Published : 10 May 2024 04:39 AM
Last Updated : 10 May 2024 04:39 AM

இந்தியாவை நிலைகுலைய செய்ய முயற்சி: அமெரிக்கா மீது ரஷ்ய வெளியுறவுத்துறை குற்றச்சாட்டு

மாஸ்கோ: ‘‘மதச்சுதந்திர விதிமுறை மீறல் குற்றச்சாட்டை சுமத்தி, தேர்தல் நேரத்தில் இந்தியாவை நிலைகுலைய செய்ய அமெரிக்கா முயற்சிக்கிறது’’ என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய நடந்த முயற்சியின் பின்னணியில் இந்திய உளவுத்துறை ( ரா) இருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் என்ற இதழில் செய்தி வெளியானது. குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய கூலிப்படையை நியமிக்க இந்திய தொழிலதிபர் நிகில் குப்தாவுக்கு இந்திய உளவுத்துறை (ரா) அதிகாரி விக்ரம் யாதவ் உத்தரவிட்டிருந்தார் எனவும், இந்த சதி திட்டத்துக்கு ரா பிரிவு தலைவர் சமந்த் கோயல் ஒப்புதல் அளித்திருந்தார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தனது எதிரியை பழிவாங்க ரஷ்யாவும், சவுதி அரேபியாவும் மேற்கொள்ளும் செயலைஇந்தியாவும் செய்ய முயற்சிக்கிறது என வாஷிங்டன் போஸ்ட் கூறியிருந்தது.

இந்த குற்றச்சாட்டை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்திருந்தது. ஆனாலும், இந்தியாவில் மதச் சுதந்திர விதிமுறை மீறல் உள்ளதாக அமெரிக்க அரசின் அறிக்கையில் விமர்சிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியாஜகரோவா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஆதாரம் வழங்கவில்லை: குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சியில் இந்தியர்களுக்கு தொடர்பு உள்ளதாக அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டு தவறானது. இதற்காக எந்த நம்பத்தகுந்த ஆதாரத்தையும் இதுவரை அமெரிக்கா வழங்கவில்லை.

ஆதாரம் இல்லாமல் யூகங்கள் அடிப்படையில் குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியாவின் தேசிய மனநிலையை அமெரிக்காவால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தியாவை அமெரிக்கா அவமதிக்கிறது. இந்தியா மீது மட்டும் அல்லாமல், பல நாடுகள் மதச் சுதந்திரத்தை மீறுவதாக அமெரிக்கா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறுகிறது. இது காலனி ஆதிக்கத்தின் மனநிலை.

மக்களவை தேர்தல் நடைபெறும் நேரத்தில், மதச்சுதந்திர விதிமுறை மீறல் குற்றச்சாட்டை சுமத்தி இந்தியாவை நிலைகுலைய செய்ய அமெரிக்கா முயற்சிக்கிறது. இவ்வாறு மரியா ஜகரோவா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x