Published : 02 Apr 2018 01:07 PM
Last Updated : 02 Apr 2018 01:07 PM
அமெரிக்காவில் தங்கி பணியாற்றுவோர்களுக்கான எச்-1 பி விசா வழங்கும் நடைமுறை இன்று தொடங்கியது.
விண்ணப்பங்கள் மீதான பரிசீலனையை மிகக் கடுமையாக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் உத்தரவிட்டு இருப்பதால், சிறுகுறைகள் இருந்தாலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
அமெரிக்காவில் குடியேறாமல், அங்கு தங்கி பணியாற்றுபவர்களுக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசா பெறுவோர், 3 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கி அங்கு பணியாற்றலாம்.
அமெரிக்காவில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் தங்களுக்கு தேவையான வேலையாட்களை இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து பணியமர்திக்கொள்ள இந்த எச்-1பி விசாவை அதிகமாக பயன்படுத்தி வருகின்றன.
ஆனால், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே, அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும் என்று அமெரிக்க சுதேசியை முன்னிறுத்தி முழுக்கமிட்டு வந்தார்.
அதே நடைமுறையையும் இப்போது பின்பற்ற தீவிரமாக அதிபர் டிரம்ப் இருந்துவருகிறார். அந்த அடிப்படையில், வெளிநாட்டு மக்கள், அமெரிக்க வேலையை அதிகமாக ஆக்கிரமிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதற்காக இந்த ஆண்டு எச்-1பி விசாவில் பல கட்டுப்பாடுகளும், பரிசீலனையில் கடும் நெறிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. விண்ணப்பத்தில் மிகச்சிறிய குறை இருந்தாலும், அந்த விண்ணப்பத்தை உடனடியாக நிராகரிக்க அமெரிக்க குடியேற்றத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் எச்-1பி விசா 65 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட உள்ளது, இதே நடைமுறை இந்த ஆண்டும் பின்பற்றப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு விசாக்கள் குறைக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்த 65 ஆயிரம் விசாக்களில், 20 ஆயிரம் விசாக்கள் அமெரிக்காவில் முதுநிலை படிப்புக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு செல்லும்.
எச்1-பி விசாவு பெறுவதற்கு இன்று விண்ணப்பம் செய்யும் நடைமுறை தொடங்கி, அதன்பின் பரிசீலனை செப்டம்பர் 10-ம் தேதிவரை நடைபெறும், வரும் அக்டோபர் மாதம் விசா வழங்கும் நடைமுறை தொடங்கும்.
அதேசமயம், எச்1-பி விசாவுக்கு விண்ணப்பிக்கும் நபர், நிறுவனங்கள் அளிக்கும் டூப்ளிகேட் விண்ணப்பத்தை இந்த ஆண்டு வழங்கினால் அது பரிசீலனையின் போது நிராகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரிமியம் எச்1-பி விசா ரத்து
இந்த ஆண்டு பிரிமியம் எச்1-பி விசா வழங்கும் முறை ரத்து செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டுமுறை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ள அமெரிக்க குடியேற்றத்துறை, விசா விண்ணப்பத்தோடு கடந்த ஆண்டுகாலம் பயன்படுத்திய இமெயில், சமூக ஊடகத்தின் விவரம், உள்ளிட்டவற்றை தாக்கல் செய்ய கேட்டுள்ளது.
மேலும், வழக்கமாக எச்1-பி விசாவுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறை என்பது கணினி மூலம் நடத்தப்படும் குலுக்கல் முறையில் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு பரிசீலனை விதிமுறைகள் தீவிரமாக பின்பற்றப்பட இருப்பதால், அந்த நடைமுறை தொடருமா என்பது தெரியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT