Published : 23 Aug 2014 12:00 AM
Last Updated : 23 Aug 2014 12:00 AM

பேஸ்புக் மீதான வழக்கு: 60 ஆயிரம் பயனாளர்கள் ஆதரவு

சமூக வலைதளமான பேஸ்புக் மீது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சட்டக் கல்வி மாணவர் மேக்ஸ் செரிம்ஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பேஸ்புக்கை பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட விஷயங்களை அந்நிறுவனம் வேவு பார்ப்பதாக அவர் முக்கியமாக குற்றம்சாட்டியுள்ளார். அவரது இந்த வழக்குக்கு பேஸ்புக்கை பயன்படுத்தும் 60 ஆயிரம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக்கை பயன்படுத்துபவர்களின் அந்தரங்க விஷயங்களை வேவுபார்த்ததற்காக அந்நிறுவனம், அதனை பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.40 ஆயிரம் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று மேக்ஸ் ஐரோப்பிய நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ளார். பேஸ்புக்கை சுமார் 132 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். அந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் கோடியாகும்.

இந்நிலையில் வியன்னா நீதிமன்றத்தில் பேஸ்புக் மீது மேக்ஸ் புதிய வழக்கை தொடர்ந்துள்ளார். இதில் அமெரிக்க உளவு அமைப்பான என்ஐஏ-வுக்கு தனது பயனாளர்களின் விவரங்களை பேஸ்புக் தருகிறது என்ற கூடுதல் குற்றச்சாட்டையும் அவர் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக பதில் அளிக்குமாறு பேஸ்புக் நிறுவனத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பேஸ்புக்குக்கு எதிரான மேக்ஸின் இந்த சட்டப் போராட்டத்துக்கு ஏற்கெனவே 25 ஆயிரம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை 60 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இதற்கான www.fbclaim.com என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் தொடர்ந்து ஏராளமானவர்கள் தங்களை இணைத்து பேஸ்புக்குக்கு எதிரான தனது போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருவதாக மேக்ஸ் கூறியுள்ளார்.

பேஸ்புக் மீது ஏற்கெனவே இதுபோன்ற சில வழக்குகள் தனிநபர்களால் தொடரப்பட்டுள்ளன. ஆனால் இந்த வழக்கில் பேஸ்புக்கை பயன்படுத்தும் பலரும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதால், இது அந்த நிறுவனத்துக்கு சட்டரீதியான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x