Published : 27 Apr 2024 07:36 PM
Last Updated : 27 Apr 2024 07:36 PM
லா பிளாட்டா: அர்ஜென்டினாவைச் சேர்ந்த அலெஜான்ட்ரா மரிசா ரோட்ரிக்ஸ் என்ற பெண் தனது 60-வது வயதில் 'மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்' பட்டம் வென்றுள்ளார். அர்ஜென்டினாவில் உள்ள ஒரு மாகாணம்தான் பியூனஸ் அயர்ஸ். இந்த மாகாணத்துக்கான ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில்தான் அதிக வயதில் வென்றுள்ளார் இவர்.
பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தின் தலைநகரான லா பிளாட்டா நகரைச் சேர்ந்தவர் அலெஜான்ட்ரா மரிசா ரோட்ரிக்ஸ். தற்போது 60 வயதாகும் இவர், வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடந்த பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தில் நடந்த 'மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்' போட்டியில் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
இதன் மூலம் அதிக வயதில் அழகி பட்டம் வென்ற முதல் பெண்மணி என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் 18 - 28 வயதுடைய பெண்கள் மட்டுமே அழகி போட்டியில் பங்கேற்க முடியும். கடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு இந்த விதியை திருத்தி அழகி போட்டியில் பங்கேற்க வயது வரம்பு தடை இல்லை என்று அறிவித்தது. இதனால், 60-வது வயதில் அழகி பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் அலெஜான்ட்ரா மரிசா ரோட்ரிக்ஸ்.
முன்னதாக, அழகிப் போட்டியில் மரிசா ரோட்ரிக்ஸ் வெளிப்படுத்திய நேர்த்தியும், நளினமும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வெற்றிக்கு பின் பேசிய அவர், "அழகுப் போட்டிகளில் அதிக வயதில் வென்றவர் என்ற முன்னுதாரணத்தை ஏற்படுத்தியதில் நான் மகிழ்ச்சிகொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
'மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்' பட்டம் வென்றதன் மூலம் தேச அளவிலான 'மிஸ் யுனிவர்ஸ் அர்ஜென்டினா' அழகி போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளார் அலெஜான்ட்ரா மரிசா ரோட்ரிக்ஸ். மே மாதம் நடைபெறவுள்ள அந்தப் போட்டியிலும் வெல்லும் பட்சத்தில் 'மிஸ் யுனிவர்ஸ்' அழகி போட்டியில் பங்கேற்க தகுதிபெறுவார். இதனால் அவர் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT