Published : 25 Apr 2024 11:45 AM
Last Updated : 25 Apr 2024 11:45 AM

ரஃபாவில் தரைவழித் தாக்குதலுக்கு ஆயத்தமாகும் இஸ்ரேல்: பொறுமை காக்க அமெரிக்கா வேண்டுகோள்

டெல் அவிவ்: காசாவின் தெற்கு பகுதியில் உள்ள ரஃபா நகரில் தரைவழித் தாக்குதலை மேற்கொள்ள இஸ்ரேல் ஆயத்தமாகி வரும் சூழலில். ‘இது மனிதாபிமான அளவில் பேரழிவை ஏற்படுத்தும்’ என சர்வதேச சமூகங்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத இஸ்ரேல், ரஃபாவில் உள்ள ஹமாஸ் பதுங்கிடங்களை ஒட்டிய பகுதிகளில் இருந்து பாலஸ்தீனர்களை அப்புறப்படுத்தும் பணியை ஆரம்பிக்க ஆயத்தமாகி வருகிறது.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்து டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில், “ரஃபாவில் தாக்குதல் நடத்த அனைத்து ஆயத்தப் பணிகளும் செய்தாகிவிட்டன. அரசு ஒப்புதல் வந்த அடுத்த நொடி தாக்குதல் தொடங்கும் என்றார்.

ரஃபாவில் தாக்குதல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளாக இஸ்ரேல் 40 ஆயிரம் தற்காலிக கூடாரங்களை வாங்கியுள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது. ஒரு கூடாரத்தில் 10 முதல் 12 பேர் வரை தங்கவைக்கப்படலாம். ரஃபாவில் இருந்து பொதுமக்களை வெளியேற்றி அவர்களை இந்தக் கூடாரங்களில் தங்கவைக்க இஸ்ரேல் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. பிரதமர் நெதன்யாகுவின் போர் அமைச்சரவை இன்னும் சில நாட்களில் இது தொடர்பாக முக்கிய முடிவை எடுக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எகிப்து கண்டனம்: இஸ்ரேல் ரஃபா தாக்குதலுக்கு ஆயத்தமாவதை எகிப்து அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது. ரஃபாவில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதல் நடத்தினால் கொத்துகொத்தாக மனித உயிர்கள் பறிபோகும். ரஃபாவில் இருந்து அகதிகள் எகிப்துக்குள் அனுப்பிவிடலாம் என்றும் இஸ்ரேல் திட்டமிடுகிறது. அது நடக்காது. என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்கா யோசனை: இதற்கிடையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், “இஸ்ரேலுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ரஃபாவில் உள்ள ஹமாஸ் அச்சுறுத்தலைக் கையாள வேறு வழிகளை நாடுமாறும் யோசனை சொல்லியிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

ரஃபாவை ஏன் இஸ்ரேல் குறிவைக்கிறது? கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இஸ்ரேல் ஹமாஸ் அழிப்பில் தீவிரமாக இயங்கிவருகிறது. “ஹமாஸ் படைகளில் 4 முக்கிய போர்ப் பிரிவுகள் ரஃபாவில் இருந்து இயங்குகிறது என இஸ்ரேல் கூறுகிறது. எனவே ரஃபாவை கட்டுக்குள் கொண்டுவந்தாலே ஹமாஸை வெல்ல முடியும் என இஸ்ரேல் கணிக்கிறது.

காசாவின் வடக்கில் ஹமாஸ் படையினர் படுதோல்வியடைந்தனர். மையப் பகுதியிலும் ஹமாஸ் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. ரஃபாவில் அவர்கள் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவே இந்தத் தாக்குதல் திட்டம்” என்று காசாவில் தாக்குதலில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் படைப் பிரிவின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் இட்சிக் ஹோஹன் தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x