Published : 18 Apr 2024 04:24 PM
Last Updated : 18 Apr 2024 04:24 PM

‘டைம்’ இதழின் 100 செல்வாக்காளரில் கோவையை பூர்விகமாக கொண்ட பேராசிரியர் - யார் இந்த பிரியம்வதா?

பேராசிரியர் பிரியம்வதா நடராஜன்

வாஷிங்டன்: அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் வானியல் மற்றும் இயற்பியல் துறையில் பேராசிரியராக பணிபுரியும் பிரியம்வதா நடராஜன், ‘டைம்’ இதழின் உலகளவில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் கோவை மாவட்டத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘டைம்’ இதழ் 2024-ம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், 8 இந்தியர்கள் இடம்பெற்று சுவாரஸ்யம் சேர்த்துள்ளனர். உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா, ஒலிம்பிக் பதக்க மங்கை சாக்‌ஷி மாலிக், இண்டோ - பிரிட்டிஷ் நடிகர் தேவ் படேல், பாலிவுட் நடிகை ஆலியா பட், மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்ய நாதெள்ள, அமெரிக்க அரசுத் துறை ஊழியர் ஜிகர் ஷா, வானியல் துறை பேராசிரியை பிரியம்வதா நடராஜன், இந்திய வம்சாவளி உணவக தொழிலதிபர் அஸ்மா கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

யார் இந்த பிரியம்வதா நடராஜன்? - பிரியம்வதா நடராஜன் தமிழகத்தைச் சேர்ந்த கோவை மாவட்டத்தில் பிறந்தவர். தனது பள்ளிப் படிப்பை டெல்லியின் ஆர்.கே.புரத்தில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் முடித்தார். பிரியம்வதா நடராஜன் யேல் பல்கலைக்கழகத்தில் வானியல் மற்றும் இயற்பியல் பேராசிரியர் ஆக பணிபுரிகிறார். பல்கலைக்கழகத்தில் வானியல் துறை தலைவர் ஆகவும் உள்ளார். அதோடு பெண் பேராசிரியர் அமைப்பின் தலைவர் ஆகவும் உள்ளார்.

மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் கணிதவியல் பாடங்களில் பட்டம் பெற்றுள்ளார். பின்னர் அவர் 1999-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அதோடு கருந்துளைகள் (Black holes) பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டார். 2022-ம் ஆண்டு லிபர்டி அறிவியல் மையத்தின் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். ‘Mapping the Heavens: The Radical Scientific Ideas That Reveal the Cosmos' என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். இந்தப் புத்தகம் 2016-ஆம் ஆண்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவை சேர்ந்த ஷெப் டோல்மேன் என்பவர் தான் எழுதிய ‘டைம்’ கட்டுரையில், “பிரியா ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில் மிகவும் சாமர்த்தியம் கொண்டவர். நான் எப்போதும் அவரது பணிகளால் ஈர்க்கப்பட்டுள்ளேன். அவரின் சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று, நமது பிரபஞ்ச தொடக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு ஒரு படி மேலே செல்லும் அளவுக்கு இருந்தது” என்று பெருமிதத்துடன் எழுதியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x