Published : 17 Apr 2024 08:55 AM
Last Updated : 17 Apr 2024 08:55 AM

தத்தளிக்கும் துபாய் | ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது

மழை வெள்ளம் சூழப்பட்ட துபாய் குடியிருப்புப் பகுதி

துபாய்: வறண்ட வானிலையே ஐக்கிய அரபு அமீரக நாட்டின் இயல்பு. ஆனால் நேற்று (ஏப்ரல் 16) பெய்த வரலாறு காணாத கன மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதை சமுத்திரம் போல் காட்சியளித்தது. உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் வெகுவாக தடைபட்டன. துபாயின் அடையாளங்களான துபாய் மால், எமிரேட்ஸ் மால் ஆகிய இரு வணிக வளாகங்களுக்கும் மழை நீர் புகுந்தது. துபாயின் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றிலும் தண்ணீர் புகுந்து சேவை பாதிக்கப்பட்டது.

ஓராண்டில் பெய்ய வேண்டிய சராசரி மழையளவு ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததாலேயே இந்த நிலை ஏற்பட்டதாக துபாய் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

12 மணி நேரத்தில்.. விமான நிலையத்தில் உள்ள வானிலை ஆய்வு அமைப்புகளின் தரவின்படி 12 மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. துபாயின் ஓராண்டு பெய்யக்கூடிய மொத்த சராசரி மழையளவு இது என ஐ.நா.வும் தெரிவித்துள்ளது.

அரேபிய தீபகற்ப பகுதியைக் கடந்து சென்ற மிகப் பெரிய புயலே இந்த பெருமழைக்குக் காரணம். இது தற்போது ஓமன் வளைகுடாவில் உலாவுகிறது. இதே அமைப்பால் ஓமன் மற்று தென் கிழக்கு ஈரானில் வழக்கத்துக்கு மாறான மழை கொட்டித் தீர்த்துள்ளது.

துபாயில் செவ்வாய் இரவு முதலே மழை குறைந்தாலும் கூட இன்று (புதன்கிழமையும்) ஆங்காங்கே லேசான மழை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

18 பேர் பலி: பஹ்ரைனிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளிலும் புயல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓமனில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஞாயிரன்று மழை வெள்ளத்தில் 9 பள்ளிக் குழந்தைகள், 3 பெரியவர்களுடன் கூடிய வாகனம் இழுத்துச் செல்லப்பட்டது. அதுதவிர நேற்று ஒரு குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. இதுவரை 18 உயிரிழப்புகள் அங்கு பதிவாகியுள்ளது. இருவரை காணவில்லை. திடீர் புயல், மழை, வெள்ளத்தால் வளைகுடா நாடுகள் திகைத்துப் போயுள்ளன.

இது ஒருபுறம் இருக்க துபாய், ஷார்ஜாவில் இருந்து சென்னை வரும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x