Published : 13 Apr 2024 04:56 PM
Last Updated : 13 Apr 2024 04:56 PM

சிட்னி கத்திக் குத்து தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு, பலர் காயம் - ஷாப்பிங் மாலில் நடந்தது என்ன?

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஷாப்பிங் மாலில் நடந்த கத்திக் குத்து தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.

சிட்னியின் போண்டி கடற்கரைக்கு அருகில் ஒரு ஷாப்பிங் மால் ஒன்றில் ஆஸ்திரேலிய ரக்பி லீக் ஜெர்சி அணிந்த ஒரு நபர் பெரிய கத்தியுடன் கண்ணில் சிக்குபவர்களை குத்தி தாக்குதல் நடத்தினார். ஒன்பது மாதக் குழந்தை, அவரின் தாய் என பலரை அந்த நபர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவசர அழைப்பின்படி ஹெலிகாப்டர் மூலம் ஷாப்பிங் மால் விரைந்த நியூ சவுத் வேல்ஸ் போலீஸார், மாலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவரை சுட்டு வீழ்த்தினர். எனினும், அவர் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். காவல் துறை இந்த உயிரிழப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது. அதேநேரம், தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "தாக்குதலின் நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை. தாக்குதலில் ஈடுபட்டவரின் அடையாளம் தெரியவில்லை. ஆனால், நிச்சயம் இது பயங்கவராத செயல்தான். அந்த அளவுக்கு கொடூரமாக ஒவ்வொருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். குற்றவாளியை அடையாளம் காண நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். காயமடைந்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தாக்குதல் குறித்து சோகத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், "துரதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அனைத்து ஆஸ்திரேலியர்களின் எண்ணங்கள் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களுடன் உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x