Published : 10 Apr 2024 06:10 PM
Last Updated : 10 Apr 2024 06:10 PM

“இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தவறு செய்கிறார்” - காசா விவகாரத்தில் பைடன் அதிருப்தி

ஜோ பைடன்

டெல் அவில்: இஸ்ரேல் - காசா போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், “இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அணுகுமுறை தவறானது. அவருடைய அணுகுமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 7, 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - காசா போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இஸ்ரேலிய தாக்குதல்களில் தற்போது வரை 33,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலியர்கள் 1,200 பேர் உயிரிழந்தனர். அதோடு, உள்ளூர் சுகாதார அமைச்சகத்தின்படி, கிட்டத்தட்ட 23 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கடலோரப் பகுதியில் வாழும் மக்கள் பசி, பட்டினியால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு ராணுவ உதவிகளை செய்துவரும் அமெரிக்கா, இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஜோ பைடன் செவ்வாய்க்கிழமை ஒளிபரப்பான தொலைக்காட்சி நேர்காணலில் கூறும்போது, “இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு செய்வது தவறு என்றே நான் நினைக்கிறேன். அவருடைய அணுகுமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை. நிவாரண உதவிகள் வழங்கும் அமைப்பின் வாகனம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது மூர்க்கத்தனமானது.

காசா மீதான போரை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்த வேண்டுமென நான் அழைப்பு விடுக்கிறேன். காசாவுக்குள் 6 முதல் 8 வாரங்கள் நிவாரண பொருட்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். உணவு, மருந்து பொருட்கள் செல்ல முழு அனுமதி அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினர் இடையே போர் நிறுத்தம் தொடர்பான உடன்படிக்கை இன்னும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x