Published : 06 Apr 2024 05:14 PM
Last Updated : 06 Apr 2024 05:14 PM
ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியா, அமெரிக்கா மற்றும் தென் கொரிய பொதுத் தேர்தல்களை சீர்குலைக்க சீனா சதி செய்வதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு எல்லா தளங்களிலும் அதிகரித்து வரும் சூழலில் அரசியலிலும் ஏஐ பயன்பாடு இருக்கிறது. ஆக்கபூர்வமான பயன்பாடுகள் கவனம் ஈர்க்கும் நிலையில், அதே ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேர்தலையே சீர்குலைக்க சீனா சதித் திட்டம் தீட்டுவதாக ஓர் எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டு பேரதிரிச்சியைக் கடத்தியுள்ளது தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனமான மைக்ரோசாஃப்ட்.
இந்தியா, அமெரிக்கா, தென் கொரியா தேர்தல்களை ஏஐ தொழில்நுட்பத்தைக் கொண்டு சிதைக்க சீனா சதி செய்கிறது என்பதே அந்த அறிக்கையின் சாராம்சம். தைவானில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சீனா வெள்ளோட்டம் பார்த்ததை சுட்டிக்காட்டி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான அரசியல் விளம்பரங்கள், டீப் ஃபேக் படங்கள், ஆடியோக்கள், வீடியோக்கள் வாக்காளர்களை திசைதிருப்பும் என்று மைக்ரோசாஃப்ட் எச்சரிக்கின்றது.
மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். ஏஐ தொழில்நுட்பத்தை சமூக மேம்பாடு, பெண்களுக்கான வளர்ச்சி, சுகாதாரம், வேளாண் துறைகளில் புத்தாக்கம் ஆகியனவற்றிற்காகப் பயன்படுத்துவது எப்படி என இருவரும் ஆலோசித்தனர்.
இந்நிலையில்தான் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்திய, அமெரிக்க மற்றும் தென் கொரிய தேர்தல்களை சீர்குலைக்க சீனா சதி செய்வதாக மைக்ரோசாஃப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
2024-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 64 நாடுகள் தேசியத் தேர்தலை சந்திக்கின்றன. இந்த 64 நாடுகளில் உலக மக்கள் தொகையில் 49 சதவீதம் பேர் வசிக்கின்றனர். இத்தகைய சூழலில் சீன அரசு ஆதரவு கொண்ட சைபர் குழுமங்கள், வட கொரியாவின் உதவியோடு 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பல்வேறு தேர்தல்களையும் சிதைக்க திட்டமிட்டு வருகின்றன என்கிறது மைக்ரோசாஃப்ட். சமூக வலைதளங்களில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட கருத்துகளைப் பரப்பி பொது மக்களின் எண்ண அலைகளை மாற்றலாம் என அவை திட்டமிடுகிறது என்கிறது அந்த அறிக்கை.
ஏஐ பயன்படுத்தி தவறான, போலியான கருத்துகளை உருவாக்க முடியும். ஒரு வேட்பாளரின் அறிக்கை குறித்து தவறான தகவலைப் பரப்ப முடியும். பல்வேறு பிரச்சினைகளிலும் அவரின் நிலைப்பாட்டை திரித்து வெளியிட முடியும். சில நிகழ்வுகளை நடந்ததாகக் காட்ட முடியும். நடந்ததை நடக்கவேயில்லை என மறைக்க முடியும். இதன் மீது கவனம் செலுத்தாவிட்டால் நிச்சயமாக இவை வாக்காளர்களை திசை திருப்பும்.
சீனாவின் இம்முயற்சியின் தாக்கம் உடனடியாக எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கணிக்க இயலாவிட்டாலும் கூட காலப்போக்கில் இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தாக்கத்தை ஏற்படுத்துவது அதற்கு கைவந்த கலையாக மாறலாம் எனவும் மைக்ரோசாஃப்ட் கணிக்கிறது.
தைவான் தேர்தலில் சீன ஆதரவு சைபர் குழுக்கள் சமூக வலைதளங்களில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட மீம்கள், போலி ஆடியோக்களை பரப்பி மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்த முயன்றன. ஈரானும் இதேபோன்ற உத்திகளைப் பயன்படுத்தியதாகத் தகவல்கள் இருக்கின்றன. ஈரான் தொலைக்காட்சி நிருபர்களின் டீப் ஃபேக் வீடியோக்களைக் கொண்டு மக்களை மூளைச்சலவை செய்ய பயன்படுத்தியதாகத் தெரிகிறது.
உலகிலேயே முதன்முறையாக ஒரு நாட்டின் தேர்தலில் இன்னொரு நாடு வெளியில் இருந்து ஆதிக்கத்தை செலுத்த முயன்றது என்றால், அது தைவான் தேர்தலாகத்தான் இருக்கும். Storm-1376 என்ற ஏஐ குழு தைவான் தேர்தலில் இறங்கி தன் கைவரிசையைக் காட்டியுள்ளது என்கிறது மைக்ரோசாஃப்ட்.
அமெரிக்க தேர்தல் களம் பற்றித் தெரிந்துகொள்ள சீன குழுக்கள் சில பிரச்சாரங்களை முன்னெடுத்தது. பிரிவினையை உண்டாக்கும் கேள்விகளைப் பரப்பி, அதன் மூலம் வாக்களிக்கும் விதம் தொடர்பான சில நுண் விவரங்களைப் பெற முயன்றது. ஏன் பெற்றும் கொண்டதாகத் தெரிகிறது.
அதனாலேயே, அமெரிக்க அதிபர் ஜோ பைடனே மக்கள் யாரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவது போல் ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட குரல் பரப்ப்பட்டது. இது அண்மையில் பேசு பொருளானது நினைவுகூரத்தக்கது.
இந்தியாவில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் தொடங்கவிருக்கும் நிலையில், தேர்தல்களில் ஏஐ தொழில்நுட்பம் விஷமத்தனமாக பயன்படுத்துவதைத் தவிர்க்க தேர்தல் ஆணையம் ஓபன் ஏஐ போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. > மேலும் வாசிக்க: AI சூழ் உலகு 17 - ‘டீப்ஃபேக் வீடியோ, வாய்ஸ் குளோனிங்’ - இது தேர்தல் கால அச்சுறுத்தல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT