Published : 02 Apr 2024 05:08 PM
Last Updated : 02 Apr 2024 05:08 PM
ஒட்டாவா: கனடா பள்ளிகளில் உணவுத் திட்டத்தை கொண்டுவர இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அந்நாட்டின் 2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதன் முன்னோட்டமாக தேசிய பள்ளி உணவுத் திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக பிரதமர் அறிவித்திருக்கிறார்.
இந்தத் திட்டத்துக்காக 5 ஆண்டுகளுக்கு 1 பில்லியன் டாலர் ஒதுக்கப்படும் என்றும். ஆண்டுதோறும் 4 லட்சம் குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் மூலம் உணவு வழங்கப்படும் என்றும் கனடா அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தங்கள் குழந்தைகள் பள்ளிகளுக்கு பட்டினியாக சென்றுவிடுகிறார்கள் என்ற கவலை பெற்றோருக்கு நீங்கும். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதால் மகிழ்ச்சி கிட்டும். இதனால் அவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும் என்று கனடா அரசுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குழந்தைகளின் எதிர்காலத்தின் மீதான முதலீடு. இந்தத் திட்டம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். பூர்வக்குடிகள், பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் உதவியாக இருக்கும். எந்த பாரபட்சமும் இன்றி வளரும் குழந்தைகள் அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு கிடைப்பதை இத்திட்டம் உறுதி செய்கிறது என்று கனடா அரசு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “ஓர் ஆசிரியராக, குழந்தைகள் நிறைந்த வயிறுடன் நன்றாகக் கற்பார்கள் என்பதை நான் அறிவேன். எங்களது தேசிய பள்ளி உணவுத் திட்டம் குழந்தைகள் பள்ளிக்கு பட்டினியாகச் செல்வதைத் தடுக்கும். ஒவ்வொரு குழந்தையும் வகுப்பறையில் அவர்களின் முழுத் திறனை வெளிப்படுத்த ஏதுவான ஊட்டச்சத்தை அது அவர்களுக்குத் தரும்” எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இந்தத் திட்ட அறிவிப்பின்போது பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “தேசிய பள்ளி உணவுத் திட்டம் மாற்றத்தை உருவாக்கும். இது குடும்பங்களின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும். இது குழந்தைகளின் எதிர்காலம் மீதான நேரடி முதலீடு. இத்திட்டம் அவர்களை மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக வைத்திருக்கும். இது குழந்தைகளுக்கு நியாயம் செய்வதாகும்” எனக் கூறியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT