Published : 30 Mar 2024 06:44 PM
Last Updated : 30 Mar 2024 06:44 PM
ஆம்ஸ்டெர்டாம்: நெதர்லாந்தின் ஈத் நகரில் பணயக் கைதிகள் அனைவரும் பத்திரமாக விடுவிக்கப்பட்டதாகவும், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
நெதர்லாந்தின் ஈத் நகரில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இன்று அதிகாலை 4 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என அஞ்சப்பட்டது. இதையடுத்து, பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் உள்பட பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர். நகரின் 150 கட்டிடங்களில் வசித்தவர்கள் பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால், நெதர்லாந்தில் காலை முதல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பல மணி நேர பரபரப்புக்கு மத்தியில் பிணைக் கைதிகளில் 3 பேர் விடுவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு கைகளை ஆட்டியவாறு வெளியே வந்தனர். அவர்கள் வெளியே வந்த வீடியோவை நெதர்லாந்து அரசு தொலைக்காட்சி வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக, நான்காவது நபரும் பத்திரமாக வெளியே வந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் பக்கத்தில் தகவல் வெளியிட்ட நெதர்லாந்து போலீசார், கடைசி பிணைக் கைதியும் விடுவிக்கப்பட்டார். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போதைய சூழலில் கூடுதல் விவரங்களை தெரிவிக்க இயலாது என தெரிவித்தனர்.
இதனிடையே, இந்த சம்பவத்தில் "பயங்கரவாத நோக்கம்" இருப்பதாக சந்தேகிக்க எந்த காரணமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"பிணைக் கைதிகள் அனைவரும் ஒரு பயங்கரமான சூழ்நிலையில் இருந்து விடுபட்டுள்ளார்கள். அவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியே வர வேண்டும்; அவர்களது குடும்பத்தினரோடு சேர வேண்டும் என்பதுதான் எனது கவலையாக இருந்தது. தற்போது நிலைமை விரைவாகவும் பாதுகாப்பாகவும் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன்” என்று ஈத் மேயர் ரெனே வெர்ஹல்ஸ்ட் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT