Published : 27 Mar 2024 06:44 AM
Last Updated : 27 Mar 2024 06:44 AM

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

அமெரிக்கா மேரிலேண்டின் பால்டிமோர் நகரில் உள்ள பிரான்சிஸ் ஸ்காட் பாலத்தின் மீது சிங்கப்பூருக்கு சொந்தமான கன்டெய்னர் கப்பல் நேற்று எதிர்பாராதவிதமாக மோதியதில் உருக்குலைந்து ஆற்றுக்குள் மூழ்கி கிடக்கும் பாலத்தின் பாகங்கள்.படம்: பிடிஐ

வாஷிங்டன்: அமெரிக்காவின் பால்டிமோர் நகரத்தில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த ஒரு பெரிய பாலம் சிங்கப்பூருக்கு சொந்தமான சரக்கு கப்பல் மோதியதில் நேற்று இடிந்து விழுந்தது. நீருக்குள் மூழ்கியவர்களை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான வீடியோ கட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து பால்டிமோர் காவல் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே கட்டப் பட்டுள்ள பாலம் சரக்கு கப்பல் மோதி இடிந்து விழுந்த சம்பவம் நள்ளிரவில் தெரியவந்தது. இதையடுத்து விரைந்து சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கப்பல் மோதியதில் பாலத்தின் ஒவ்வொரு பகுதியாக அடுத்தடுத்து இடிந்து விழும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தது.

மேலும் இந்த சம்பவத்தின்போது பாலத்தில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அவற்றுடன் சேர்த்து டிராக்டர்-டிரெய்லரும் ஆற்றுக்குள் விழுந்தது. நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்தப் பாலம் கடந்த 1977-ல் திறந்து வைக்கப்பட்டது. சுமார் 1.6 மைல் (2.6 கிலோமீட்டர்) தொலைவுக்கு நான்குவழிப் பாதையாக உருவாக்கப்பட்ட இந்தப் பாலத்தை ஆண்டுக்கு 11 மில்லியன் அதாவது 1.10 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

வாஷிங்டனுக்கு அடுத்தபடியாக அமெரிக்க கிழக்கு கடற்கரையில் உள்ள தொழில்நகரமான பால்டிமோரை சுற்றியுள்ள சாலைப் போக்குவரத்தின் முக்கியஇணைப்பு மையமாக இந்த பாலம் விளங்கியது. இது, இடிந்து விழுந்ததையடுத்து வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x