Published : 23 Mar 2024 06:12 AM
Last Updated : 23 Mar 2024 06:12 AM

அமெரிக்கா வரும் இந்திய மாணவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: இந்திரா நூயி வேண்டுகோள்

இந்திரா நூயி

நியூயார்க்: பெப்சி நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் இந்திரா நூயி (68). இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். வர்த்தக உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க அதிகாரிகளில் ஒருவராக இருந்தார். அவர் தற்போது 10 நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் இந்திரா நூயி பேசியிருப்பதாவது:

இந்த வீடியோவை வெளியிட காரணம், இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் சில பிரச்சினைகளில் சிக்குவது தொடர்பாக ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்க்கிறேன். ஏற்கெனவே அமெரிக்கா வந்து படிக்கும் இந்திய இளைஞர்கள் அல்லது இனிமேல் அமெரிக்கா வர நினைக்கும் இந்திய இளைஞர்களுக்கு ஒன்று சொல்கிறேன். இங்கு வந்த பிறகு உள்ளூர் சட்டத்தை மதித்து நடந்து கொள்ளுங்கள். போதை பொருட்கள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

இரவு நேரத்தில் இருட்டான பகுதிகளுக்கு செல்வது, அளவுக்கதிகமாக மது அருந்துவது போன்றவற்றை தயவுசெய்து தவிர்த்துவிடுங்கள். அப்படி செய்வதால்தான் பெரும் பிரச்சினையாகிறது. அதேபோல் அமெரிக்கா வரும்இந்திய மாணவர்கள் எந்தப்பல்கலைக்கழகம், என்ன படிப்பதுஎன்பதை மிகவும் கவனமாக தேர்ந்தெடுங்கள்.

அமெரிக்கா வந்த சில மாதங்கள் மிகவும் கவனமாக இருங்கள். குடும்பம், மொழி, கலாச்சாரம் போன்ற அனைத்து விஷயங்களில் இருந்தும் வெகு தூரம் வந்துவிட்டதால், முழு சுதந்திரம் இருக்கும். இங்கு எல்லா பழக்கத்தையும் முயற்சிப்பது எளிது. எனினும், பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்திய மாணவர்களின் கடின உழைப்பு, திறமை பற்றி நான் அறிவேன். மாணவர்கள் சிலர் போதைக்கு அடிமையாகும் சம்ப வங்கள் நடக்கின்றன. அதில் இருந்து விலகி இருங்கள். அந்தப் பழக்கம் மிகவும் கொடியது. அது உங்களுடைய உடல்நலன், மனநலனை கெடுக்கும். உங்கள்எதிர்காலத்தை, தொழிலை சீரழித்துவிடும்.

எனவே, சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுங்கள். விசா, பகுதி நேர வேலை போன்ற விஷயங்களில் சட்டத்தை மீறாதீர்கள். அமெரிக்காவில் உங்களுடைய எல்லை எதுவரை என்பதை முழுமையாக புரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு இந்திரா நூயி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x