Published : 18 Mar 2024 09:50 AM
Last Updated : 18 Mar 2024 09:50 AM
மாஸ்கோ: “அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் - ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் மூளும். ஆனால், அத்தகையச் சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை” என்று மீண்டும் ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள விளாடிமிர் புதின் தனது வெற்றி உரையில் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இத்தேர்தலில், தற்போதைய அதிபர் புதின் சுயேட்சையாக போட்டியிடும் சூழலில் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயக கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களம் கண்டன. முதன்முறையாக ரஷ்ய வரலாற்றில் மூன்று நாட்கள் வாக்குப்பதிவு நடந்தது.
இந்நிலையில் அதிபர் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ரஷ்ய வரலாற்றில் ஸ்டாலினுக்குப் பிறகு தொடர்ச்சியாக 3வது முறையாக அதிபர் தேர்தலில் வெற்றி என்ற சாதனையை புதின் படைத்துள்ளார். 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு சாதனையை புதின் செய்துள்ளார்.
தேர்தலில் மெகா வெற்றியைப் பெற்றிருக்கும் புதின் ஆற்றிய முதல் உரையில், “அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் - ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக் கொள்வது என்பது இந்த உலகம் மூன்றாம் உலகப் போரை எதிர்கொள்வதற்கு வெகு அருகில் நிற்கிறது என்று அர்த்தம். அத்தகைய சூழலை எவருமே விரும்பமாட்டார்கள். ஆனால், இந்த நவீன உலகத்தில் எதுவும் சாத்தியமே.
ஆனால் உக்ரைனில் நேட்டோ படைகள் உள்ளன. அவற்றில் ஏற்கெனவே ஆங்கிலம் பேசும் வீரர்களும், பிரெஞ்சு பேசும் வீரர்களும் உள்ளனர். அவர்கள் அங்கே கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருக்கின்றனர். சம்மபந்தப்பட்ட நாடுகள் தங்கள் வீரர்களை திரும்பப் பெற்றுக் கொள்வது நலம்.
சிறையில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் நவல்னியை நான் விடுதலை செய்யவே விரும்பினேன். ஆனால் அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். மேற்கத்திய நாடுகளின் சில சிறைகளில் இருக்கும் ரஷ்யக் கைதிகளுக்கு மாற்றாக நவல்னியை விடுவிக்க ஒப்புக் கொண்டிருந்தேன். அவரது மறைவு எதிர்பாராதது. ஆனால் அதை சிலர் விமர்சிக்கின்றனர். அமெரிக்கச் சிறைகளில் இதுபோன்ற இறப்புகள் நேர்ந்ததே இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நேர்ந்திருக்கின்றன. அமெரிக்காவில் ஜனநாயகம் இல்லை. அங்கே இப்போது மிகப்பெரிய குளறுபடியான சூழல் மட்டுமே நிகழ்கிறது. நிலவரம் அப்படியிருக்க அவர்கள் ரஷ்ய தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என்று போலி குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நகைப்புக்குரியது. இவ்வாறு புதின் பேசினார்.
ரஷ்யா தேர்தலில் பதிவான வாக்குகளில் 70 சதவீதம் வாக்குகள் எண்ணப்பட்டுவிட்ட நிலையில் அவற்றில் 87.17 சதவீத வாக்குகளை புதின் பெற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...