Published : 08 Aug 2014 10:00 AM
Last Updated : 08 Aug 2014 10:00 AM

பாலஸ்தீன பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்

பாலஸ்தீனத்தின் காஸாவில் தற்போது ஏற்பட்டுள்ள போரை நிறுத்த பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காண முடியும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடைபெற்ற விவாதத்தின்போது இந்தியா கூறியுள்ளது.

காஸாவில் கடந்த 5-ம் தேதி முதல் 72 மணி நேர போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், இதுவரை 1,900 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். காஸாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் இயக்கத்தினரின் எதிர் தாக்குதலில் 64 இஸ்ரேல் வீரர்களும், 3 பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம் கடந்த புதன்கிழமை நியூயார்க்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி அசோக் முகர்ஜி பேசியதாவது: “காஸாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலைக்கு தீர்வு காண பேச்சு வார்த்தையின் மூலம் அரசியல் ரீதியான உடன்பாடு எட்டப்படுவதே சரியான நடவடிக்கையாக இருக்க முடியும். இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ – மூனின் கருத்தை நாங்கள் ஏற்கிறோம்.

தற்போது காஸாவில் அமல்படுத்தப்பட்டுள்ள 72 மணி நேர போர்நிறுத்தத்தை, மேலும் நீட்டிப்பதற்காக மேற்கொள்ளப் படும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும். தவறிழைத்தவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும். அப்போதுதான் ஐ.நா. சபையின் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும். காஸாவின் எல்லைப் பகுதி மூடப்பட்டுள்ளதால், அத்தியாவசி யப் பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொருளாதார நடவடிக்கை பாதிக்கப்படுகிறது. எல்லையை திறந்துவிட வேண்டும்.

பாலஸ்தீனம் தொடர்பான ஐ.நா. தீர்மானம், அரபு அமைதித் திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும். கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்டு ஒருங்கிணைந்த, இறை யாண்மை மிக்க சுதந்திர நாடாக பாலஸ்தீனத்தை உருவாக்க வேண்டும்” என்றார்.

பான் கீ – மூன் வேண்டுகோள்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ – மூன் பேசும்போது, “காஸா, மேற்குக் கரை, இஸ்ரேலில் மக்கள்படும் துயரங்கள் முடிவுக்கு வர வேண்டும். காஸாவில் மறு கட்டுமானப் பணிகளுக்கு உதவ ஐ.நா. சபை தயாராக உள்ளது.

இஸ்ரேலும் பாலஸ்தீனமும் ஒட்டுமொத்த உலக நாடுகளை சங்கடத்திலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளன. அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்க வேண்டிய மோசமான நிலை உலக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இப்படியே தொடர்ந்து இடிப்பதும், மறுகட்டுமானம் செய்வதுமாக இருப்பது சரியா? இருதரப்பும் நிரந்தர தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x