Published : 20 Aug 2014 06:34 PM
Last Updated : 20 Aug 2014 06:34 PM

மாயமான மலேசிய விமானத்தின் பயணிகள் பிராணவாயு இல்லாமல் பலியாகியிருக்கலாம்: புதிய தகவல்

மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370-ல் பயணம் செய்தவர்கள் பிராண வாயு இல்லாமல் மூச்சுத் திணறி பலியாகியிருக்கலாம் என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் அந்த விமானத்தின் பைலட் வேண்டுமென்றே பிராண வாயு தொடர்பைத் துண்டித்திருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது.

இந்த புதிய ஐயத்தை நியூசிலாந்தில் உள்ள விமான விபத்துக்கள் பற்றிய ஆய்வு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். டெய்லி மிரர் பத்திரிகையில் இது பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது.நியூசிலாந்தின் கிவி ஏர்லைன்ஸ் நிறுவனரும், பைலட்டுமான இவான் வில்சன் என்பவரே இந்த புதிய நோக்கை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்பாக ஆஸ்திரேலிய போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகம் வெளியிட்டுள்ளப் பார்வையிலும் இதே கருத்தைக் கூறியிருந்தது.

மேலும் மலேசிய விமானம் எம்.எச்.370-ன் விமானி அகமது ஷா மீது பெரும் சந்தேகங்களை எழுப்பியிருந்தது.

இப்போது இவான் வில்சனும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது கேபினில் பைலட் ஆக்சிஜன் தொடர்பை துண்டித்திருக்கலாம். பயணிகள் தூங்கிக்கொண்டிருந்ததால் ஆக்சிஜன் மாஸ்க்குகளை பயணிகள் பயன்படுத்த வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம் என்கிறார். தனது சக பைலட்டை கேபினிலிருந்து வெளியேற்றிவிட்டு அகமது ஷா தனது ஆக்சிஜன் மாஸ்க்கைப் பயன்படுத்தி ராடார் பார்வையிலிருந்து விமானத்தை மறைத்திருக்கலாம். இதுதான் அந்த பைலட்டின் ‘மாஸ்டர் பிளான்’ என்கிறார் இவர்.

அதன் பிறகு கட்டுப்பாட்டுடனும், நிபுணத்துவத்துடனும் அவர் கடலில் விமானத்தை இறக்கியிருக்கலாம். அதனால்தான் விமானத்தின் பாகங்கள் எதுவும் கூட கிடைக்கவில்லை என்று அவர் டெய்லி மிரர் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

மார்ச் 8ஆம் தேதி எம்.எச்.370 என்ற போயிங் விமானம் அதன் 239 பயணிகளுடன் மாயமானது. அது பற்றி இன்னமும் தெளிவாக ஒன்றும் கூற முடியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x