Published : 08 Mar 2024 01:14 PM
Last Updated : 08 Mar 2024 01:14 PM
புதுடெல்லி: கனடாவின் ஒட்டாவா நகரில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஆறு இலங்கைப் பிரஜைகள் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கனடா தலைநகர் ஒட்டாவாவில் இலங்கையைச் சேர்ந்த குடும்பம் வசித்து வந்தது. 35 வயதான தர்ஷினி தனது கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், பார்ஹெவன் பகுதியில் வசித்துவந்த தர்ஷினி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நேற்று இரவு கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் தர்ஷினி, அவரது 4 குழந்தைகள் மற்றும் குடும்ப நண்பர் என 6 பேர் உயிரிழந்தனர். தர்ஷினியின் கணவர் படுகாயமடைந்தார். இதில் இரண்டரை மாத பெண் குழந்தை மற்றும் மூன்று குழந்தைகளும் அடங்குவர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸாருக்கு தெரிய வந்த நிலையில், போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் தற்போது தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீஸார் விசாரணையில், இலங்கையைச் சேர்ந்த டிசோசா என்ற 19 வயது மாணவனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர் டிசோசா, கொல்லப்பட்ட தர்ஷினியின் வீட்டில் வசித்து வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. அதேவேளை, இந்த படுகொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள உறவினர்களுடன் தொடர்பில் இருப்பதாக இலங்கை காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
கனடா பிரதமர் ட்ரூடோ, இந்த பயங்கரமான வன்முறை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ளார். ஒட்டாவா மேயர் மார்க் சட்க்ளிஃப், நகரவாசிகள் அனைவருக்கும் இந்தச் செய்தி வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT